``தி.மு.க-விடம் 63 தொகுதிகள் வாங்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்ன?’’ - எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

தமிழருவி மணியன் - ``மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் கைகூப்பி நிற்கும் காங்கிரஸ், தமிழகத்தில் கலைஞரைக் காலில் விழச் சொல்கிறது. அவரவர் செயலே, அவரவர் விளைவு. ௬௩ தொகுதிகளில் தரிசனம் தருவது காங்கிரஸின் வளர்ச்சி அன்று; தி.மு.க-வின் தளர்ச்சி. வீக்கம்வேறு... வளர்ச்சி வேறு. காங்ககிரஸ் `ஸ்பெக்ட்ரம்’ தந்த வரத்தால் வீங்கியிருக்கிறது... வளரவில்லை!’’

``இலக்கியமும் அரசியலும் கற்றவர் தாங்கள். இரு துறைகளிலும் தங்களுக்குப் பிடித்தமானவர்கள் உண்டா... யார்?’’ - தாமரை நிலவன், திருவாரூர்.

தமிழருவி மணியன் - ``இலக்கியம் என் இதயத்தில் இணைந்தது. அரசியல் என் அறிவில் கலந்தது. என்னைப் பண்படுத்த, இலக்கியத்தில் ஈடுபடுகிறேன். நான் வாழும் மண்ணைப் பக்குவப்படுத்த, அரசியல் அரங்கில் நடமாடுகிறேன். கவிதை உலகில் நான் கண்தாசனில் தொடங்கி, பாரதி தாசனில் படர்ந்து, பாரதியில் பதிந்து, கம்பனில் கலந்து, இளங்கோவில் கரைந்து, வள்ளுவனில் திளைத்து, சங்க இலக்கியங்களில் சங்கமித்தவன். உரைநடை இலக்கியத்தில் புதுமைப்பித்தன் முதல் நாஞ்சில் நாடன் வரை பலரதுஎழுத்துக்களால் பாதிக்கப்பட்டவன். ஆனாலு என்னுள் எப்போதும் ஆராதனைக்குஉரியவர்கள்... பாரதி, பாவேந்தர், கண்ணதாசன், நா.பார்த்சாதிதி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன். அரசியலில் அன்றும் இன்றும்,என்றும் என் தொழுகைக்குரிய தலைவர் காந்தியும் காமராஜரும்!’’

``கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக உங்கள் கண்களுக்குத் தெரிபவர் யார்?’’ - எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

தமிழருவி மணியன் - ``இருண்டுகிடக்கும் வானத்தில் நட்சத்திரங்கள் தெரிவது இல்லை. அதற்காக, நட்சத்திரங்களே இல்லை என்று அர்த்தம் இல்லை. இயற்கையின் படைப்பில் வெற்றிடம் இல்லை. இரவு எவ்வளவு நீண்டுகிடந்தாலும், பொழுது விடிந்துதான் ஆக வேண்டும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக, யாராலும் வர முடியும். அதற்கு நாம் தவம் இருக்கத் தேவை இல்லை. பெரியாரும், காமராஜரும், ஜீவாவும் போல் ஒருவர் வர வேண்டும். காலம் உரிய நேரத்தில் ஒருவரைக்காட்டும்!’’

``ஒருவேளை தி.மு.க -காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியில் தி.மு.க. ஆட்சி அமைந்தால்?’’ - எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

தமிழருவி மணியன் - ``விதியே... விதியே! தமிழர் சாதியை என் செய்ய நினைத்தாய்?’’ என்று பாரதியைப் போல் பேச்சிலும் எழுத்திலும் புலம்புவேன். `தமிழர் என்றாேர் இனம் உண்டு.தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று நாமக்கல் கவிஞரை நெஞ்சில் நினைத்து, எனக்கு ஆறுதல் அடைய முயல்வேன்!’’

``பெருந்தலைவர் காமராஜரின் நற்பண்புகளை, இன்றைய தலைவர்களிடம் தனித் தனியாகவாவது காண முடிகிறதா?’’ - எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தமிழருவி மணியன் - ``தன்னல மறுப்பு, மக்கள் நலனில் முழுமையான அர்ப்பணிப்பு, நேர்மை தவறாத நேரிய வாழ்வு, தேர்தலில் தோற்கடித்தாலும் மக்களை வசைபாடாமல், அவர்கள் நலனை மட்டுமே நாடும் ஒரு கர்ம யோகியின் நெஞ்சம்- அனைத்தும் கலந்த கலவைதான் காமராஜர். அவரைப்போல் ஒரு மனிதர் இன்று நம்மிடையே நரம்பும் சதையுமாக வாழ்ந்து வருகிறார்... அவர்தான் தோழர்நல்லகண்ணு!

இவரைத் தவிர்த்து, வேறு எவரிடமும் காமராஜரின் தனித்துவம் மிக்க பண்பு நலன்களில் ஒன்றைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை!’’

`` `கற்றலில் கேட்டல் நன்று’ என்று ஏன் சொல்கிறாக்ரள்?’’ - ஆர்முருகேசன், தேனி.

தமிழருவி மணியன் - `` `செவி இருப்போர் கேட்பாராக’ என்றார் கர்த்தர். `வாசக ஞானத்தால் வருமோ சுகம்?’’ என்று கேட்டார் தாயுமானவர். கற்றுப் பெறும் அறிவு அனைவருக்கும் வாய்க்காது. கேட்டலில் கிடைக்கும் அறிவு பாமரரையும் பாதிக்கும் ஆற்றல்பெற்றது. எல்லாவற்றையும் கற்க விரும்பினால், காலம் முடிந்து விடும். சான்றோர் சொல்லைக் செவி மடுத்தாலே போதும் படித்துக் கொண்டே இருந்தால் பார்வை பழுதுபடும். எவ்வளவு நேரம் கேட்டாலும் காது நோகாது. அதனால்தான்!’’

``மகாத்மா காந்தி காங்கிரஸுக்கும், சோனியா காந்தி காங்கிரஸுக்கும் நீங்கள் காணும் வேறுபாடு என்ன?’’ - எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தமிழருவி மணியன் - ``தன்னலம் அற்ற ஒரு துறவியின் வேள்விச் சாலை-காந்தி காங்ககிரஸ். கை தேர்ந்த ஒரு வியாபாரியின் வணிகத் தலம்- சோனியா காங்கிரஸ். திருவருட்பாவுக்கும் திரைப் பாடலுக்கும் உள்ளவேறுபாடுதான், இரண்டு காங்கிரஸுக்கும் இடையில் உள்ள வேறுபாடு!’’

``சுதந்திர இந்தியாவில் தங்களை அதிர்ச்சி கொள்ளச் செய்த நிகழ்வாக எதைக் குறிப்பிடுவீர்கள்?’’ - ஆர்.விஸ்வநாதன், சென்னை-78

தமிழருவி மணியன் - ``ஆன்மிகத் தளத்தில்... பாபர் மசூதி இடிப்பு. அரசியல்களத்தில்... `ஸ்பெக்ட்ரம்’ பகற்கொள்ளை அடிப்பு!’’

``பெருந்தலைவர் இறந்தபோது அவரிடம் இருந்தது 57 ரூபாய்தானாமே... நிஜமா?’’ - ம.பாரதி, செங்கல்பட்டு.

தமிழருவி மணியன் - ``இன்னும் ஆறு ரூபாயைக் கூட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இது பொய்யின் நிழல் படாத நிஜம்!’’

``கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஒப்பிடுங்களேன்.. அல்லது வேறுபடுத்துங்களேன்?’’ - செ.கணேசன், திமிரி.

தமிழருவி மணியன் - ``கவிஞர்களை ஒப்பீடு செய்து உயர்த்துவதும், தாழ்த்துவதும் இலக்கிய தர்மம் ஆகாது. வீணையின் இசை, நாகஸ்த்தில் வராது. நாகஸ்வரத்தின் நாதம், மத்தத்தில் எழாது. மத்தள ஓசையைப் புல்லாங்குழலில் எதிர்பார்க்கக் கூடாது. நான் கண்ணதாசனின் காதலன். வாலி, வைரமுத்துவின் விமர்சனம்!’’

``கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்தது - பிடிக்காதது... ஜெயலலிதாவிடம் தங்களுக்குப் பிடித்தது -பிடிக்காதது?’’ - எம்.பழனி, மதுரை.

தமிழருவி மணியன் - ``கலைஞரிடம் பிடித்தது கடும் உழைப்பு. பிடிக்காதது தன்னை விமர்சிப்பவரை வேரறுக்கப்பார்க்கும் வெறுப்பு. ஜெயலலிதாவிடம் பிடித்தது தன்னம்பிக்கை. பிடிக்காதது தலைக்கனம்!’’

``திராவிடக் கட்சிகளை இவ்வளவு விமர்சிக்கிறீர்கள். ஆனால், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தானே தமிழகம் இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கிறது?’’ - கி.தாமரை, விழுப்புரம்.

தமிழருவி மணியன் - ``5 லட்சம், ஊழல் என்பது 1.76 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறதே அந்த `வளர்ச்சி’யை சொல்கிறீர்களா? ஆற்றின் அடிமடி வரை சுரண்டப்படகிறதே.. அந்த வளர்ச்சியா? மலைக்குன்றுகள், கிரானைட் கற்களாக மொட்டையடிக்கப்படும் வளர்ச்சியா? 14 ஆயிரம் கோடி ரூபாய் `டாஸ்மாக்’ வருவாயாக வளர்ந்திருக்கிறதே... அதுவா? திருமங்கலம் பாணியில் ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட்டதைச் சொல்கிறீர்களா? 43 ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப்பிறகும் ஆறரைக் கோடி தமிழர்களில் மூன்று கோடித் தமிழர்களுக்கு மாற்று உடை இல்லாத நிலையில், அரசு இலவச வேட்டி, புடவை வழங்குவதாக முதல்வர்கலைஞரே அறிவித்தாரே... அந்த வளர்ச்சியைக் குறிப்பிடுகிறீர்களா?’’

``எம்.ஜி.ஆர். இன்று இருந்திருந்தால்?’’ - ச.செந்தில்வேலன், திருவாரூர்.

தமிழருவி மணியன் - ``கலைஞர் கடைசி வரை மீண்டும் முதல்வராகி இருக்க முடியாது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தமிழக அம்பானிகளாக வலம் வரும் வாய்ப்பையும் இழந்திருப்பார்கள்!’’

``உங்கள் அரசியல் வாழ்வில் நீங்கள் பெருமிதப்படும் தருணம்... மறக்க நினைக்கும் சம்பவம்?’’ - சு.ராகவன், மதுராந்தகம்.

தமிழருவி மணியன் - ``பெருந்தலைவர் காமராஜர் என் உரையைக் கேட்டு, உள்ளம் நெகிழ்ந்து `தமிழருவி’ என்று அடைமொழி தந்து அழைத்த தருணம். மூப்பனார் என் பேச்சை வியந்து, கூடியிருந்த அனைவரையும் எழுந்து நின்று கரவொலி எழுப்பச் செய்து `நயாகரா நீர்வீழ்ச்சி’ என்று போற்றிப் பரவசப்பட்ட நேரம். காந்தியம் பற்றி நான் ஏவி.எம்.ராஜேஸ்வரி அரங்கில் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு,விழிகளில்நீர்வழிய ம.பொ.சி. `இந்த வாழை விழும் நேரம், அதன் காலடியில் தன் கன்றுஎழுவதைக் கண்டுவிட்டது! என்று குறிப்பிட்டு நெகிழ்ந்த ஒரு மாலைப் பொழுது...

``இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?’’ - மா.இளவரசு, காஞ்சிபுரம்

தமிழருவி மணியன் - ``தேர்தல் கமிஷன் கூடுதல் விழிப்புடன் காரியம் ஆற்றினால், கலைஞர் ஆட்சி கவிழக் கூடும்!’’

``கருணாநிதியை இந்தக் காய்ச்சு காய்ச்சுகிறீர்களே...அப்படி என்னஅவர்மேல் கோபம்?’’ - கு.பாண்டியன், திருவண்ணாமலை.

தமிழருவி மணியன் - ``20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட போதும், மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் சிதைக்கப்பட்டபோதும், தன் மகன், மகள், பேரனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதில்காட்டிய முனைப்பை, நம் இனத்தைக் காப்பாற்றுவதில் காட்ட மறந்த சுயநலம் ஒன்றுதான் என் கோபத்துக்கு முக்கிய காரணம்!’’

``பல காலம் கட்சி வளர்த்த வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி, விஜயகாந்த் குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ - கே.கணேசன், வாணியம்பாடி

தமிழருவி மணியன் - ``சினிமாவின் வீச்சு +விஜயகாந்தின் துணிச்சல் தமிழரின் ரசனை = தே.மு.தி.க-வின் வளர்ச்சி

``அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல் கூறுங்களேன்.!’’ - மா.கதிர், திண்டிவனம்.

தமிழருவி மணியன் -
1. ``பிளேட்டோவின் `குடியரசு’ (ராமானு ஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் `அரசியல்’ (சி.எஸ்.சுப்பிர மணியம்)
3. மார்க்ஸின் `மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின் `காந்திய வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. `காந்தியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராம மூர்த்தி)
6. `இந்திய அரசமைப்பு’(ஆ.சந்திரசேகரன்)
7. `பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி- தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய `இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. `பெரியார் ஆகஸ்ட் 156’ (எஸ்.வி.ராஜதுரை)
10.`இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)

``நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்த காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியே வந்தபோது, தங்கள் மனநிலை எப்படி இருந்தது? - மா.மதிபாரதி, சென்னை-91

தமிழருவி மணியன் - ``நான் உயிர்கசிய நெஞ்சில் வைத்து நேசித்தது காந்தியால் வளர்க்கப்பட்டு, காமராஜரால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் இயக்கம்- காமராஜர் கண் மூடியபோதே, மக்கள் நலனுக்கா இயங்கிய காங்கிரஸ் கல்லறையில் புதைக்கப்பட்டு விட்டது.

நான் இந்திரா காங்கிரஸை எதிர்த்து உருவான ஜனதா, ஜனதா தளத்தில்தான் என் இளமை முழுவதையும் செலவழித்தேன். மூப்பனார், காங்கிரஸைக் கைவிட்டு தனியாகத் தமிழ் மாநில காங்கிரஸை நடத்தியபோது, `காமராஜர் ஆட்சி’ அமைக்க விரும்பி எனக்கு அழைப்பு விடுத்தார்.

`சோனியா காங்கிரஸில் கடைசி வரை இணைய மாட்டேன்’ என்று என்னிடம் அவர் உறுதி அளித்த பின்பே த.மா.கா-வில் சேர்ந்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன். அவருடைய மறைவுக்குப் பின், 2001-ல் த.மா.கா, சோனியா காங்கிரஸில் சங்கமித்தது என்னை மீறிய நிகழ்வு.

2009 ஜனவரி வரை எட்டு ஆண்டுகள் நான் தமிழ்நாடு காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடித்தது, என் பொது வாழ்வில் நேர்ந்து விட்ட மாறாத களங்கம்.

இன்றநான் சிறையில் இருந்து விடுபட்ட பறவை. அரசியல் வானில் சுயேச்சையாகச் சிறகடித்துச் சுதந்திரமாகப் பறக்கிறேன். சோனியா காங்கிரஸில் இருந்த பாவத்துக்குப் பரிகாரம்தான்... `இனி,எந்தக் கட்சியிலும் இணைவது இல்லை. இதயத் துடிப்பு நிற்கும் இறுதி நாள் வரை, எந்த ஆட்சி அதிகாரப் பதவியிலும் அமர்வதும் இல்லை’ என்று நேர்ந்து கொண்ட வைராக்கியம்!’’

``எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டும் நீங்கள், தற்போதைய நேர்மையான 10 அரசியல் வாதிகளைப் பட்டியலிடுங்கள். அதில் நம் இருவரின் முதல் சாய்ஸ் நல்லகண்ணுவாகத்தான் இருப்பார். மீதி 9 பேரை வரிசைப்படுத்துங்களேன்?’’ - என்.சதானந்தம், விழுப்புரம்.

தமிழருவி மணியன் - ``முதலில் ஒரு திருத்தம். நான் யாரையும் எந்தி நிலையிலும் திட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்வது இல்லை. `காமம் செப்பாது கண்டது மொழிதல்’ முக்கியம். யாரையும் இச்சகம் பேசி நான் இன்று வரை அடைய விரும்பியது எதுவும் இல்லை. நெஞ்சில் பட்டதை நேர்பட பேசுவேன். அச்சமின்றி உள்ளம் உணர்ந்த உண்மை எழுதுவேண். இதனால் எனக்கு ஏற்படும் இழப்பு, வலி போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. போகட்டும். தரவரிசைப்படுத்த என்னிடம் எந்த `அக்மார்க்’ அளவுகோலும் யாரும் வழங்கவில்லை. அதிகப்பிரசங்கியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. நானறிந்து மதிக்கும் அரசியல் நேர்மையாளர் நல்லகண்ணு!’’

``நீங்கள் கலைஞரோடு சுமுகமாக இருந்த வரைக்கும் அவர் சரியாக இருந்ததாக எண்ணுகிறீர்களா?’’ - சு.கார்த்திகேயன், புதுவை.

தமிழருவி மணியன் - ``ஐந்தாவது முறை கலைஞர் முதல்வரான பின்பு, அவரிடம் நான் கண்ட அணுகுமுறைகளில் நல்ல மாற்றம் தெரிந்தது. தன்னுடைய வாழ்வின் மாலைப் பொழுதில் அவர் நிறை மனிதராக நல்லாட்சி தரப்போகிறார் என்று நெஞ்சார நம்பினேன். வால்மீகியின் ராமாயணத்தை வாசிக்கும்போதும், அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடும்போதும் அவர்களுடைய மூலத்தை ஆராய்வது அறிவுடமை ஆகாது.நான் உறுப்பினராக இருந்த திட்டக் கமிஷனுக்கும் ஊழலுக்கும் எள்ளவு தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லா அரசியல்வாதிகளும் ஊழலில் ஊறித் திளைப்பதால், அவருடைய ஆட்சியில் அரங்கேறிய ஊழல் நடவடிக்கைகள் எனக்கு வியப்பைத் தரவில்லை.

ஆனால், ஈழத் தமிழரை அவர் கைவிட்டவிதம் என்னை ரணப்படுத்தியதால், பதவியை உதறிவிட்டு விமர்சனக் கணைகளை வீசத்தொடங்கினேன். அவர் என் மீது பொழிந்த அன்பு அதிகம். இன்று என்னை வாடகை வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் வீதியில் நிறுத்தும் அளவுக்கு என் மீது உமிழும் வெறுப்பு மிக அதிகம்.!’’

``ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்காமல் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?’’ - மா.ஆதி, சென்னை-65.

தமிழருவி மணியன் - ``அவர் எந்தப் பிரச்சனையிலும் வாய் திறக்காமல் இருப்பதற்கு வழங்கப்பட்டதுதான் பிரதமர் பதவி என்பதை அவர் நன்கு அறிவார்!’’

``பேச்சுக் கலையில் உங்கள் முன்னோடி யார்?’’ - ஆர்.குமார், வந்தவாசி.

தமிழருவி மணியன் - `` `அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக அவர் பேசியிருக்கிறார்!’’ என்று மென்மையான வார்த்தைகளால் மேடை நாகரிகம் காத்த `சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி.சம்பத்!’’

``ஓட்டுக்குப் பணத்தை நான் மறுத்தாலும், வீட்டுக்குள் கவரில் பணத்தை வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள் கடந்த தேர்தலின்போது! அந்தப் பணத்தை வீசி எறிய மனம் இல்லாமல் செலவிழித்தேன். இப்போதும் பணம் கொடுப்பார்கள் என்கிறார்கள் நான் என்னசெய்வது?’’ - சு.ஜானகி, செங்கல்பட்டு.

தமிழருவி மணியன் - ``தவறான வழியில் வந்த பணத்தைக் கையால் தொடுவது கூடக் தகாது. உங்களை மீறி யாராவது வீட்டுக்குள் வீசி எறிந்தால், அந்தப் பணத்தை வீதியில் கையேந்தும் ஏழைகள் பசியாறப் பகிர்ந்து கொடுங்கள். பாவத்தின் கறை பட்ட பணம் புனிதப்பட அது ஒன்றுதான் வழி. பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் `சத்தியவான்கள்’ கழுத்தில், நாளை ஊழல் பாசக் கயிறு விழுந்து இறுக்கும்போது, காப்பாற்ற `சாவித்திரிகள்’ கிடைக்க மாட்டார்கள்!’’

``உங்களைப் போன்றவர்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை?’’ - ஆர்.ராஜேந்திரன், திருத்தணி.

தமிழருவி மணியன் - ``ஆட்சியில் பதவியைப் பெறுவதும், பணத்தைப் பெருக்குவதும்தான் வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் தோற்றுவிட்டது உண்மை. 20 ஆண்டு கால அரசியல் வாழ்வில், நான்கு செப்புக் காசுகளைக்கூட நேர்மைக்கு மாறாகவும், அறத்துக்குப் புறம்பாகவும் சேர்க்காத தூய்மைதான் பெருமைக்குரிய வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் வெற்றியாளர்களே! பதவியை மறந்து, பணத்தைத் துறந்தவர்...அரசியலில் தோற்றவரா... ஜெயித்தவரா?’’

`` `மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்’ என்று வைரவரி. `அன்பிற் சிறந்த தவமில்லை’ என்ற வேத வாசம்!’’ - மு.மணிவாசகம், சென்னை-15.

தமிழருவி மணியன் - `` `மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்’ என்று வைரவரி. `அன்பிற் சிறந்த தவமில்லை’ என்ற வேத வாசம்!’’

``நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட தலித் அமைப்புகள் அரசியல் லாபத்துக்காகத் தடம் புரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ - கே.முத்து,பெண்ணாகரம்.

தமிழருவி மணியன் - ``சின்னச் சின்ன சுகங்களுக்காக தலித் தலைவர்கள் சமரசங்களுக்கு ஆட்பட்டுவிடுவதற்காக வருந்துகிறேன். காந்தியைக்கூட சிறிதும் சமரசத்துக்குஇடமின்றி எதிர்த்த அம்பேத்கரைப் போல் இவர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’’

``அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடும் மாவோயிஸ்ட்டுகள் பற்றி உங்கள் கருத்து?’’ - ஆர்.ராஜா, வல்லக்கோட்டை.

தமிழருவி மணியன் - ``அவர்களுடைய இலக்கு புனிதமானது.அதை அடைவதற்கு அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை பயங்கரமானது. வன்முறையில் கட்டப்படும் சமூக மாற்றங்கள் சரிந்துவிடும் என்பது தான்சரித்திரம்!’’

``ராகுல் காந்தி பற்றி உங்கள ம்திப்பீடு?’’ - எம்.குணசீலன், மேட்டுப்பாளையம்.

தமிழருவி மணியன் - ``களை பறிக்காமலேயே விளைச்சலைப் பெருக்க வீண் கனவு காணும் இளம் விவசாயி!’’

``மறைந்த அரசியல் தலைவர்களுள் யாரேனும் ஒருவரை உயிர் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. யாரைப் பிழைக்க வைப்பீர்கள்?’’ - கே.வெங்கடேசன், மருத்துவத்தூர்.

தமிழருவி மணியன் - ``மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றி முடிக்க நான் உயிர் பிழைக்கவைக்கும் ஒரே மனிதர், பெருந்தலைவர் காமராஜர்!’’

``தி.மு.க, அ.தி.மு.க இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் விட்டு தமிழக மக்கள் வெளிவரவே முடியாதா?’’ - மா.சுரேஷ்,வேலூர்.

தமிழருவி மணியன் - ``நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள். நல்லது தானே நடக்கும்!

 

 

 

 

 

     
 
 
 
ஆசைகளும் அடங்குவது இல்லை.!

ஆசைப்படுபவர்களுக்கு ஓர் உண்மை புரிய வேண்டும். ஆசைப்படி ஒன்றை அனுபவிப்பதனால் அதன் மீதிருந்த தாகம் தீர்ந்துவிடாது. உறங்குவதன் மூலம் நித்திரையை வெல்ல முடியாது; அந்த நித்திரை மீண்டும் வரும். சுகம் தருவதால் ஒருபெண்ணைத் திருப்தி செய்ய முடியாது. அவளுக்கு அது மீண்டும் தேவைப்படும். விறகினால் நெருப்பு நிறைவடையாது; அதற்கு மேலும் விறகு வேண்டும். குடிப்பதால் மதுவின் மோகம் தீராது. நதிகள் எவ்வளவு நீரைக் கொண்டு வந்து சேர்த்தாலும் கடல் நிறைவடையாதது போல், ஆண் தரும் இன்பத் தில் பெண் திருப்தியுறாதது போல், ஆசைப்பட்டவைகளை அனுபவிப்பதன் மூலம் எந்த மனிதனின் ஆசைகளும் அடங்குவது இல்லை’ என்கிறது நம் மகாபாரதம்.

 
Copyright © 2008 thamizharuvimanian.com