``நீங்கள் உங்களை `அரசியல் அநாதை’ என்று குறிப்பிட்டீர்கள். ஆனால், தற்போது வைகோவைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?’’ - சு.ஹரி, திருப்பூர்.

தமிழருவி மணியன் - ``எதுவும் இல்லாதவன் ஏழை. ஆதரிப்பார் அற்றவன் அநாதை. இருப்பதைத் துறப்பவன் துறவி. இன்றைய தேர்தல் களத்தில், வைகோ ஒரு துறவி!’’

``மறைமுகமாக உங்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவுக்குப் பிறகும் ஜெயலலிதா தன் மனநிலையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறீர்களா?’’ - ஆர். பாஸ்கரன், சென்னை-75.

தமிழருவி மணியன் - ``மறைமுகமாக அல்ல... நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன்.. நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளையருக்கும் இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர் தான் அரசியல். தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்து கொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதைவிட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார். இந்திய அரசியலில். இதுவரை யார் வரக்கூடாது என்று தான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக்கூடாது என்று தான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள். என் வாக்கு... ஜெயலலிதா வரவேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக்கூடாது என்பதற்காக!

ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!’’

`` `காந்திய மக்கள் இயக்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறீர்கள் உங்கள் மனசாட்சியைத்தொட்டுச் சொல்லுங்கள் காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா?’’ - ஆ.கதிர், மதுரை.

தமிழருவி மணியன் - ``நம் சமுதாயம் சகல மட்டங்களிலும் ஆரோக்கியம் இழந்து அழுகிப்போனதற்கு ஒரே காரணம், காந்திய வழியில் இருந்து நாம்விலகி நடந்ததுதான். கிராமம் வரைஅதிகாரப் பரவல், தற்சார்புப் பொருளாதாரம், சிறுதொழில் வளர்ச்சி, தாய்மொழி வழிக் கல்வி, ஆடம்பரம் அற்ற எளிய வாழ்க்கை முறை, புலனடக்கம், கட்சிகளற்ற ஜனநாயகம் என்ற காந்தியத்தின் தடத்தில் நாம் கால்பதித்து நடந்திருந்தால், ஊழலற்ற பொது வாழ்வு, ஏழ்மை இல்லாத இந்தியா இந்நேரம் உருவெடுத்து இருக்கும்.

காந்தியின் எல்லாக் கொள்கைகளையும் கண்மூடிப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் குறிப்பிட்ட கொள்கைகள் எந்த நிலையிலும் ஏற்கத்தக்கவை. பாராட்ட முறையில் காந்தியப் போர்முறை ஒன்றுதான் உன்னதம். அதிக உயிர்ச் சேதம் இன்றி, அதிகாரத்தைப் புரட்டிப் போடும் அகிம்சை. இந்த ஆயுதம் தான் முபாரக்கை எகிப்தில் முடக்கியது. இந்த ஆயுதத்தை ஈழத்தில் மக்கள் தொடர்ந்து பிரபாகரன் தலைமையில் ஏந்தி வீதிகளில் நின்று இருந்தால், ஈழம் தமிழரின் தன்நாடாய் இந்நேரம் பிறந்து இருக்கும். இவ்வளவு அழிவுகளை என் இனம் அங்கு சந்தித்து இருக்காது. ஒரு லட்சம் தமிழர் என்னோடு காந்திய மக்கள் இயக்கத்தில் சேர்ந்து நடந்தால், எந்த அரசியல்வாதியும் தவறு இழைக்க முடியாத சமூகத்தை நான் அமைத்துக் காட்டுவேன்.

இழப்புகளையும் வலிகளையும் என்னோடு சேர்ந்து அனுபவிக்க நீங்கள் தயாரா? முதல் நிபந்தனை, நாம் பதவி மறுப்பார்களாகப் பணியாற்ற வேண்டும்!’’

``உங்கள் இளம் பிராயக் காதல்அனுபவம் குaறித்துக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?’’ - எம்.பிரபு,தஞ்சாவூர்.

தமிழருவி மணியன் - ``என் காதலி...தெய்வத்தின் சிருஷ்டியில் அவள் ஒரு தேவதையின் வார்ப்பு. அவர்ள பூக்களின் அனிச்சம்; புள்ளினங்களின் அசுணம். அவளுக்கு மலர்களைவிடவும் மென்மையான மேனி; பளிங்கைவிடவும் பரிசுத்தமான உள்ளம். அவளைச் சந்திப்பதற்கு முன்பு, என் இதயம் வெறும் கருங்கல்லாய்க் கிடந்தது. தன் நயன உளிகளால் அவள்தான் அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு சிலையாக மாற்றினாள். இப்போது சிலை இருக்கிறது அந்தச் சிற்பியைத்தான் காணோம்!’’

``துக்ளக் ஆசிரியர் சோ பற்றி தங்கள் கருத்து?’’ - மா.வடிவேல், சிதம்பரம்.

தமிழருவி மணியன் - ``நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்பவர் பெரும்பான்மைக் கருத்தோடு இயைந்து போவது தான் எழுத்துலகத் தர்மம் என்று ஏற்காதவர். ஒரு தனிமனிதனின் பேனாவை மட்டுமே நம்பி, ஓர் இதழை 41 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று சாதித்தவர். பொய்யாக யாரையும் புகழ்ந்து பேசத் தெரியாதவர். ஆனால், பெண்களுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கும் ஓர் அழுத்தமான ஆணாதிக்கவாதியாகத் தன்னை வேண்டும் என்றே வெளிப்படுத்திக் கொள்பவர். இதில் ஜெயலலிதாவுக்கு மட்டும் அவ்வப்போது விதிவிலக்கு வழங்குபவர்!’’

``உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர்களின் படைப்புகள் எவை?’’ - கோவிந்தராஜ், வாணியம்பாடி.

தமிழருவி மணியன் - ``பாசாங்கு மொழியில்,சரிகை வேலைப்பாடுகள் இல்லதமல், மண்ணின் ஈரம் மணக்க ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கையின் நிறத்தை இயல்பாய் வடித்தெடுத்த இளம்பிறையின் `நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்ற படைப்பும், ஒரு பெண்ணின் நுண்மையான அந்தரங்க உணர்வுகளைக் கலை வடிவம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே எழுத்தில் இறக்கிவைக்கம் அற்புதத்தை நிகழ்த்திய சல்மாவின் `ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற படைப்பும்!’’

``முழுக்க முழுக்க சுயநலவாதிகளாக இருந்து கொண்டு, பொது நலத்துக்காகவே வாழ்வது போல் வலம் வர இந்த அரசியல்வாதிகளால் எப்படி முடிகிறது?’’ - என்.பாலகிருஷ்ணன், மதுரை,

தமிழருவி மணியன் - ``வேஷங்கள் போட்டுப் போட்டு... அது தோல், சதை, எலும்புக்குள் இறங்கி, வேஷமே உங்கள் இயல்பாகிவிட்டது’’-என்ற புவியரசின் கவிதையை நீங்கள் படித்து இருந்தால், இந்த ஐயம் உங்களுக்குள் உருவாகி இருக்காது. அரசியல் உலகில் அடுத்தவர் குருதியில் ஆயுளைப் பெருக்கிக் கொள்ளும் கொசுக்களின் கூட்டமே அதிகம். சொந்த நலனுக்காக நம் தேசத்தைக்கூடத் தெருவில்நிறுத்தத் துணியும் இந்த முகமூடி மனிதர்களின் சுய முகம் காண்பது அவ்வளவு எளிதான செயல் அன்று!’’

``உலகமயமாக்கலால் கல்வி முறை, நாகரிகம், பழக்க வழக்கம், ஏன் வாழ்க்கை முறையே மாறிப்போன இந்நாளில், காந்தியம் இனியும் சாத்தியமா?’’ - அ.யாழினி பர்வதம், சென்னை.

தமிழருவி மணியன் - ``நோய் நிறைந்த இடத்தில்தானே மருத்துவர் தேவை. வெள்ளாடு மேயும் விளை நிலத்துக்குத்தானே வேலி தேவை.வெறுப்புக்கு மாற்றாக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்துக்கு எதிராகத் தியாகம், புற ஆரவாரங்களுக்குப் புறம்பாக அக நாகரிகம் வளர்த்தெடுப்பதுதான் காந்தியம். உலகமமாக்கல் சீதனமாய் நம்மிடம் கொண்டு சேர்த்த நுகர்வு வெறியின் முற்றுகையில் மூழ்கி இருக்கும் இளைய சமூகத்தின் வாழ்வை முறைப்படுத்துவதும், நெறிப்படுத்துவதும் காந்தியத்தால்மட்டுமே சாத்தியப்படும்!’’

``ஒரு அரசாங்கமே வீதிக்கு வீதி மதுக் கடைகளை நடத்துவதும், அதனால் இவ்வளவு வருமானம் என்று சொல்வதும், யாரும் பெரிதாக இதை எதிர்க்காததும், வெட்கக்கேடான செயல்தானே? இந்த நிலை எப்போது மாறும்?’’ - இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

தமிழருவி மணியன் - ``அரசு வருவாய் அதிகரிக்க `விலை மகளிர் விடுதி’ நடத்தாதவரை நல்லது என்று மன நிறைவு கொள்ளுங்கள். குடிப்பவரையும் கெடுக்கும்; குடும்பத்தையும் கெடுக்கும் என்று குடிமக்கள் உணராதவரை மதுக் கடைகளுக்கு மூடு விழா நடக்கும் வாய்ப்பு இல்லை!’’

``பெருந்தலைவர்காமராசர், அறிஞர் அண்ணா, பகுத்தறிவுத் தந்தை பெரியார்.. இவர்கள் எல்லாம் இன்று உயிரோடு இருந்தால்...?’’ - ரா.ரவி, நாமக்கல்.

தமிழருவி மணியன் - ``காமராஜர் கதர் ஆடையைக் கழற்றி எறிந்து விட்டு, சத்தியமூர்த்தி பவனை இழுத்து மூடி இருப்பார். `காங்கிரஸுக்கும் கழகத்துக்கும் ஒரே லட்சியம்தான்’ என்று கலைஞர் சொன்னதைக் கேட்டதும், கழகத்தைக் கலைத்துவிடும்படி அண்ணா `தம்பிக்கு’க் கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். பெரியார் முதல் வேலையாக, வீரமணியைத் திராவிடர் கழகப் பொறுப்பில் இருந்து விலக்கி இருப்பார்!’’

``திராவிடக் கட்சிகள் போல் சிறந்த மேடைப் பேச்சாளர்கள் காங்கிரஸில் உருவாவது இல்லையே... ஏன்?’’ - வி.தங்கம், செய்யாறு.

தமிழருவி மணியன் - ``சிறப்பாகப் பேசத் தெரியாதவர்களும் ஒழுங்காக எழுத முடியாதவர்களும்தான் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தமிழ்நாடு காங்கிரஸ் என்பது குள்ளர்களின் சாம்ராஜ்யம். இந்தக் குள்ளர்கள் ஒருபோதும்,தம்மைவிட ஓர் அங்குலம் உயரமானர்வகளைக்கூட உடன் இருக்க அனுமதிப்பது இல்லை!’’

``இன்றைய இளைஞர்களிடம் தேச பக்தி வளர்ந்துள்ளதா?’’ - எஸ்.டேனியல் ஜூலியட், கோவை.

தமிழருவி மணியன் - ``இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட்களத்தில் மோதும்போது தேச பக்தி பொங்கி வழிகிறது. சக மனிதரின் துயர் துடைப்பதில் தன் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்ற சிந்தனைக்குச் சிறிதும் இடமின்றி,சுய நலத்தில் சுருங்கிவிடுவதில் தேசபக்தி வைகை மணல் போல் வறண்டுவிடுகிறது. தேசபக்தி என்பது வெறும் மண் சார்ந்தது இல்லை; மக்கள் நலன் சார்ந்தது!’’

``இன்றைய இளம் தலைமுறையினர் அறிவுரை கூறினால் எள்ளி நகையாடுகிறார்களே...?’’ - ரேவதிப்பிரியன், ஈரோடு-1.

தமிழருவி மணியன் - ``வரைமுறையற்ற வாழ்வை நடத்துபவர் வள்ளுவம் பேசுவதையும், மதுவின் போதையில் மயங்கி நிற்பவர் மகாத்மாவின் பாதையில் நம்மைப் பயணிக்கச் சொல்வதையும், மாமிசம் நாறும் வாயோடு வந்தவர் வள்ளலாரின் உயிர இரக்கம் குறித்து உரைநிகர்த்துவதையும் பார்க்கும் இளைஞர்கள் எள்ளி நகையாடாமல் என்ன செய்வார்கள்?

`என் வாழ்வே என் செய்தி’ என்று மகாத்மாவைப்போன்று எத்தனை மனிதர்களால் சொல்ல முடியும்? ஆயிரம் வார்த்தைகளைவிட, ஒரு நற்செயல் வலிமையானது. அவர்களுக்கு முன் மாதிரியாக நாம் வாழும் வாழ்க்கையில் நடந்து காட்டுவோம்.வார்த்தைகளால் வானத்தை வளைக்க முடியாதே!’’

``ஆசை -நப்பாசை -பேராசை... என்ன வித்தியாசம்.’’ - பி.கோபி, தூத்துக்குடி.

தமிழருவி மணியன் - ``எம்.ஜி.ஆரைப் போல் திரையுலகில் ஒரு நடிகராக வலம் வர விரும்புவது ஆசை. அவரைப் போல்கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்புவது நப்பாசை. முதல்வர் நாற்காலிக்கனவில் மூழ்குவது பேராசை.’’

``விஜயகாந்த் நேர்மையான அரசியல்வாதியா... அல்லது அப்படி நடிப்பவரா?’’ - க.ராஜா, திருவண்ணாமலை.

தமிழருவி மணியன் - ``அரசியல்உலகில் நேர்மை உறங்கும் நேரம் இது. உண்மையைப் பற்றிப் பேசுவதை விட, உண்மையாக வாழ்வதுதான் முக்கியம். விஜயகாந்த் நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக நடப்பாரா? காலம் எந்த முகமூடியையும் ஒருநாள் கழற்றிப் போடும். அதுவரை காத்திருங்கள்!’’

``தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?’’ - கே.சுபாஷ்,திருவண்ணாமலை.

தமிழருவி மணியன் - ``எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவை விட மிகச் சரியாக அறிந்து வைத்திருப்பவர்!’’

``ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு வந்தால் உங்களிடம் வந்தால்..?’’ - என்.குமரேசன், விழுப்புரம்.

தமிழருவி மணியன் - ``வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!’’

``அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?’’ - ஆர்.ராஜா, திமிரி.

தமிழருவி மணியன் - ``பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்து வைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!’’

``என்ன தான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச் சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, மு￞லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர்ஆட்சியில் தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?’’ - எம்.ராஜேஷ்,பெருங்குளத்தூர்.

தமிழருவி மணியன் - `` `என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணர்வகளுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலில் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம். இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்க சேகரிக்க எலை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!’’

``டிவி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?’’ - ஆர்.தனசேகரன், சென்னை -75.

தமிழருவி மணியன் - ``வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!’’

``வைகோ...?’’ - என்.மனோஜ்குமார், ஆரணி.

தமிழருவி மணியன் - ``நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்ள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!’’

``இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எடு கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிக் கொண்டு போராடவில்லை?’’ - பா.குமரய்யா, சென்னை.

தமிழருவி மணியன் - ``மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சி கொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவு ஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தைகளும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும். மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலமைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும். ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் `மானாடுவதிலும், மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவு ஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக் கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

``இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ - த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்.

தமிழருவி மணியன் - ``கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால்,நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந்தலைவர் காமராஜரை, `குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!’’

``ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?’’ - கே.சீனிவாசன், மதுரை.

தமிழருவி மணியன் - ``தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப் படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையும் தொலைத்து விடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!’’

``சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?’’ - சு.ஜானகி, செங்கல்பட்டு.

தமிழருவி மணியன் - ``கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் `எங்க வீட்டுப் பிள்ளை’ `அன்பே வா’, `ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் `மதராசப்பட்டினம்’. இந்தியில் `குஜாரிஷ்’, கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படிப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!’’

``மௌன விரதம், உண்ணாவிரதம் போன்ற வற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?’’ - என்.பாலகிருஷ்ணன், மதுரை.

தமிழருவி மணியன் - ``வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால் ஆரோக்கியம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால் ஆன்ம ஞானம் மலரும்!’’

``சுய மரியாதை என்றால் என்ன?’’ - கு.பாண்டியன், திருப்பத்தூர்.

தமிழருவி மணியன் - ``தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வையில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!’’

``திராவிடக் கட்சிகளின் சாதனைகள் என்ன?’’ - சி.மணி,வேலூர்.

தமிழருவி மணியன் - `` `பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ -ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்து!’’

``வரும் காலங்களில் `நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?’’ - என்.பாலகிருஷ்ணன், மதுரை.

தமிழருவி மணியன் - ``தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்ட பூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் `நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!’’

``தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே `தி.மு.க. தேவலாம்’ என்று சொல்ல வைத்துவிட்டதே அ.தி.மு.க?’’ - எம்.குணசீலன், மேட்டுப்பாளையம்.

தமிழருவி மணியன் - ``ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக் கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாய என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்!’’

``சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?’’ - சு.ஜானகி, செங்கல்பட்டு.

தமிழருவி மணியன் - ``கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் `எங்க வீட்டுப் பிள்ளை’ `அன்பே வா’, `ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் `மதராசப்பட்டினம்’. இந்தியில் `குஜாரிஷ்’, கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படிப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!’’

 

 

 

 

 

     
 
 
 
ஆசைகளும் அடங்குவது இல்லை.!

ஆசைப்படுபவர்களுக்கு ஓர் உண்மை புரிய வேண்டும். ஆசைப்படி ஒன்றை அனுபவிப்பதனால் அதன் மீதிருந்த தாகம் தீர்ந்துவிடாது. உறங்குவதன் மூலம் நித்திரையை வெல்ல முடியாது; அந்த நித்திரை மீண்டும் வரும். சுகம் தருவதால் ஒருபெண்ணைத் திருப்தி செய்ய முடியாது. அவளுக்கு அது மீண்டும் தேவைப்படும். விறகினால் நெருப்பு நிறைவடையாது; அதற்கு மேலும் விறகு வேண்டும். குடிப்பதால் மதுவின் மோகம் தீராது. நதிகள் எவ்வளவு நீரைக் கொண்டு வந்து சேர்த்தாலும் கடல் நிறைவடையாதது போல், ஆண் தரும் இன்பத் தில் பெண் திருப்தியுறாதது போல், ஆசைப்பட்டவைகளை அனுபவிப்பதன் மூலம் எந்த மனிதனின் ஆசைகளும் அடங்குவது இல்லை’ என்கிறது நம் மகாபாரதம்.

 
Copyright © 2008 thamizharuvimanian.com