`நெருக்கடி நிலை நாயகர்’ சஞ்சய் காந்தியின் முக்கியமான சீடர் அப்துல்ரகுமான் அந்துலே. 1980-களின் தொடக்கத்தில், மகாராஷ்டிர மாநில முதல்வராக மகுடம் சூட்டப்பட்டார். நவீனன் சுல்தானைப்போன்று நடந்துகொண்ட அந்துலே, ஊரை அடித்து உலையில் போட, `இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ என்ற அறக்கட்டளையை அமைத்தார். அந்த அறக்கட்டளைக்கு அள்ளிக் கொடுத்த தொழில் அதிபர்களுக்கும், வணிகப் பிரமுகர்களுக்கும் அன்று கடும் தட்டுப்பாட்டில் இருந்த சிமென்ட், எரிசாராயம் போன்றவை எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன், அவர்களுக்கு வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்க வழிவகுத்தார் அந்துலே. அவருடைய ஊழல் தாண்டவம் எல்லை மீறியதால், மக்கள் காங்கிரஸுக்கு எதிராக எழுந்தனர். கட்சியைக் காப்பாற்ற அந்துலேவை முதல்வர் பதவியில் இருந்து விலக்கும்படி இந்திரா காந்திக்கு நெருக்கமானவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், `தன்னைப் பின்பற்றுபவரின் விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்ள, பிரச்சனை வரும்போது தலைமை அவர்களோடு சேர்ந்து நிற்கவண்டும்’ என்று அவர்களிடம் கீதோபதேசம் செய்தார் இந்திரா. (ஆதாரம்:`இந்திரா காந்தி’ நூல்- ஆசிரியர் இந்தர் மல்ஹோத்ரா) அன்று அந்துலேவுக்கு இந்திரா ஆதரவாக நின்றார். இன்று ஆ.ராசாவுக்கு அரணாக நம் முதல்வர் நிற்கிறார்!

இந்திய அரசியலில் இன்று, சுயநல நோக்கத்துடன் பொய்யாகப் புகழ் பாடி, கை கட்டி, வாய் பொத்தி, போலித்தனமான பாவனைகளுடன் அடிமை ஊழியம் செய்யும் மூன்றாம்தர மனிதர்களுக்குத்தான் முக்கிய இடம் உண்டு. இவர்கள் ஆயிரம் தவறுகளை அன்றாடம் நிகழ்த்தினாலும், கட்சித் தலைமையிடம் பாவ மன்னிப்பு கட்டாயம் உண்டு. எல்லா அரசியல் கட்சிகளிலும் இதுதான் எழுதப்படாத பொது விதி. கலைஞரின் கருணையால் ஆ.ராசாவின் `கடைத்தேறும் படலம்’ அரங்கேறிவிட்டது. புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்கு அன்று போதி
சத்துவர்கள் புறப்பட்டது போன்று, `தலித் மக்களின் தகத்தகாய சூரியன்’ ஆ.ராசாவின் அப்பழுக்கற்ற நேர்மையை, பொது வாழ்வின் புனிதம் காக்க அமைச்சர் பதவியைத் துறந்த அரும்பெரும் தியாகத்தை எட்டுத் திசைகளிலும் பரப்புவதற்கு நம் கலைஞரின் `புதிய போதிசத்துவர்கள்’ புறப்பட்டுவிட்டனர். பாமர மக்களின் அறியாமை மீது இவர்களுக்குத்தான் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை!

எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் ஆ.ராசாவுக்கு எதிராக உருவாக்கும் அவதூறுகளுக்கு(!) உரிய விளக்கம் தருவதற்குத் தயாராகிவிட்ட இந்த `தர்மபாலர்கள்’ நாம் கேட்கும் சில கேள்விகளுக்குப் பதில் தந்தால் நல்லது.

1. அலைபேசிகளின் எண்ணிக்கை 40 லட்சமாக மட்டும் இருந்த 2001-ல், நிர்ணயிக்கப்பட்ட அலைக்கற்றை உரிமத்துக்கான நுழைவுக் கட்டணம் 2008 -ல் ரூ.35 கோடியாக விசுவரூப வளர்ச்சி அடைந்த நிலையிலும், சிறிதும் உயர்த்தப்படாமல் அப்படியே நிர்ணயிக்கப்பட்டதன் உள்நோக்கம் என்ன?

2.தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் ஏலம்விடும் முறையைப் பரிந்துரைத்தபோது ஆ.ராசா அதைப் புறக்கணித்தது ஏன்?

3.பிரதமர் மன்மோகன் சிங் 2007 நவம்பரில் ஆ.ராசாவுக்கு எழுதிய கடிதத்தில், `அலைக்கற்றை நுழைவுக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏல முறை குறித்து யோசிக்க வேண்டும் என்றும், மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும் என்றும்’ குறிப்பிட்ட பின்னும், பிரதமரின் பரிந்துரைகளை அலட்சியப்படுத்தியது ஏன்?

4.`நிதி அமைச்சகமுமம், சட்ட அமைச்சகமும் அலைக்கற்றை விநியோக முறை குறித்து, அமைச்சர்கள் குழுவில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியதை ஆ.ராசா தன் செவிகளில் வாங்கிக்கொள்ளாதது ஏன்?

5.`விரும்பும் நிறுவனங்கள் ௨-ஜி அலைக்கற்றை உரிமத்துக்காக 1-10-2007 வரை விண்ணப்பிக்கலாம்’ என்று முதலில் அறிவித்தது. அதன் பின்பு, விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் 25 .09.2007 என்று திடீரென்று மாற்றி, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை வந்த விண்ணப்பங்களைக் குப்பைக் கூடையில் எறிந்த விவகாரத்தின் பின்புலம் என்ன?

தெருவுக்குத் தெரு வரும் கலைஞரின் `தர்மபாலர்கள்’ இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்கள் தருவார்களா?

தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணைத் தலைவர் மிஸ்ரா... 14 ஜனவரி, 2008-ல் டெலிகாம் அமைச்சகத்துக்கு வரைந்த கடிதத்தில், `டிராய் பரிந்துரைகளில் மிக முக்கியமானவற்றை டெலிகாம் அமைச்சகம் புறக்கணித்து விட்டது’ என்று குற்றம் சாட்டினார். ஆனால், ஆ.ராசா நாடாளுமன்றத்தில் `டிராய் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’ என்று தெளிவாகப் பொய் உரைத்தார். மி￞ரா, டிசம்பர் 2008-ல் ஒரு நேர்காணலில், `முதலில் வந்தவருக்கு முதலில் வழங்க வேண்டும் என்று வழி காட்டு நெறிகளிலோ, பரிந்துரைகளிலோ... ஓர் இடத்திலும் டிராய் குறிப்பிடவே இல்லை!’’ என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் டெலிகாம் துறைக்கு டிசம்பர் 15 , 2008 அன்று எழுதிய கடிதத்தில், `2-ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பது மிகவும் ஏமாற்றத்தைத் தந்து இருப்பதாக’க் குறிப்பிட்டு இருந்தது. `புதிதாக வழங்கப்பட்ட 122 உரிமங்களில், 85 உரிமங்களைப் பெற்ற 12 நிறுவனங்கள் டெலிகாம் துறையின் நிபந்தனைகளை ஒழுங்காக நிறைவு செய்யாதவை’ என்று மத்திய தணிக்கைக் குழு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. `மிக மலிவான விலைக்கு 2-ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கி யதன் மூலம், நாட்டுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நட்டம் ஏற்படுத்திய செயலுக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் ஆ.ராசா’ என்று மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக இனம் காட்டிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும், ஆ.ராசாவை சிலுவை சுமக்கும் கர்த்தராக நம் கலைஞரின் `அப்போஸ்தலர்கள்’ காட்ட முயல்வது எவ்வளவு கொடுமையானது?

முதல்வர் கலைஞரால் ஊழல் நடைபெற வில்லை என்று உரத்த குரலில் சொல்ல முடியவில்லை. `தணிக்கைக் குழு அறிக்கை வருவாய் இழப்பு ரூ 1.76 லட்சம் கோடி என்கிறது. ஆனால், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண்ஷோரி, ரூ 30 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு இருக்கலாம் என்கிறார்’ என்று ஆறுதலடைகிறார். `முதலில் வந்தவருக்கு முதலில்’ என்ற முறையை ஆ.ராசா நேர்மையாகக் கடைப்பிடிக்கவில்லை. உரிமம் வழங்கும் முறையையே அவர் தகர்த்துவிட்டார். 374 விண்ணப்பங்கள் தொடப்படவே இல்லை. யாரோடும் கலக்காமல், விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல், தேதியை மாற்றி அமைத்து, தன் விருப்பப்படி உரிமம் வழங்கிய ஆ.ராசா அப்ரூவராகிவிடுவது நல்லது’ என்று அருண்ஷோரி கூறியது கலைஞர் கண்களில் ஏன் படவில்லை? ` ஊழலில் ஈடுபட்டவர்கள் பொது வாழ்வில் இருந்தே புறந்தள்ளப்பட வேண்டும். இவர்கள் மீது அபராதம் விதிப்பது போதாது. கைதுசெய்து சிறைக்குள் தள்ளப்பட வேண்டும்’ என்றும் அருண்ஷோரி கடுமையாகக் கருத்து தெரிவித்து இருக்கிறாரே... அதை முதல்வர் படிக்கவில்லையா?

`கும்பகோணத்துக்கு வழி கேட்டால்... கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வேன்’ என்கிறார் கலைஞர். ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி உலகமே பேசுகிறது. `ஜெயலலிதாவின் ஊழல் முறைகேடுகளை விளக்கி ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு, மக்களுக்குப் புரியவைத்திடவேண்டும்’ என்று தி.மு.க. பேச்சாளர்களுக்கு உத்தரவிடுகிறார் கலைஞர். ஜெயலலிதாவின் தவறுகளுக்கு மக்கள் ஏற்கெனவே தண்டனை தந்ததனால் தான், அவர் ஆட்சி நாற்காலியில் இருந்துறக்கப்பட்டார். கலைஞருக்கு மீண்டும் முதல்வர் மகுடம் கிடைத்தது. செய்த ஒரு குற்றத்துக்கு இருமுறை தண்டனை, இந்திய சட்டத்தில் இல்லையே?இப்போது நடந்தேறிய ￞பெக்ட்ரம் ஊழலுக்குத் தண்டனை அனுபவிக்கப்போவது யார் என்பதுதான் கேள்வி.

டான்சி நில பேரம் பழைய கதை. `வோல்டாஸ்’ விவகாரம்தான் புத்தம் புதிய திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட புதிய கதை. கலைஞர் சிறப்பாக வசனம் எழுதியதற்காக இன்னும் எத்தனை முறைதான் மந்திரிகுமாரியையும், மனோகராவையும் பார்க்க முடியும்? கலைஞரின் பழைய வீராணம் ஊழலையும், கோதுமைபேர ஊழலையும் சர்க்காரியா கமிஷனையும் பற்றி இன்று பேசினால் யார் கேட்பார்கள்? அதே நிலைதான், டான்சி கதையிலும்.

உச்ச நீதிமன்றம், `2 -ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் கூறி உள்ள குற்றச்சாட்டுகளில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது. தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும் முறைகேடாக நடந்து இருப்பதையும், இந்த நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது’ என்று வெளிப்படையாக, ஐயத்துக்கு இடமின்றி அறிவித்த பின்பும், `குற்றம் நிரூபிக்கப்பட்டால்... ஆ.ராசா மீது கழகம் நடவடிக்கை எடுக்கும்!’ என்று கூறுகிறார். கலைஞர். `இது ஊழல் அல்ல; இழப்பு’ என்று விளக்கம் தருகிறார் முதல்வர். நாட்டுக்கு இழப்பு ரூ 1.6 லட்சம் கோடியா? ரூ 60 ஆயிரம் கோடியா? என்பதல்ல, தவறான வழியில் ஒரே ஒரு ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்தினாலும், அதை ஏற்படுத்தியவர் இருக்க வேண்டிய இடம் சிறையே தவிர, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை இல்லை!

கூட்டுறவு நிறுவனத்தில் கூத்த பெருமாள் ரூ 50 லஞ்சம் வாங்கினால் ஓர் ஆண்டு சிறைவாசம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு மத்திய அமைச்சர் கோடிக்கணக்கில் ஊழல் செய்தால், விமான நிலையத்தில் வீர வரவேற்பு; மாநிலம் முழுவதும் விளக்கக் கூட்டங்கள். இதற்குப் பெயர்தான் கலைஞரின் `நெஞ்சுக்கு நீதி’.

`எருதுகளைப் பின்தொடர்ந்து போகும் வண்டியைப்போன்று, அவரவர் செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் பின்தொடர்ந்து வரும்’ என்கிறது பௌத்த வேதம் தம்மபதம்.

தெருக்களில் முழங்க வரும் புதிய போதி சத்துவர்களுக்கும், தர்மபாலர்களுக்கும், அப்போஸ்தலர்களுக்கும்... இது புரிந்தால் சரி!

-- தமிழருவி மணியன்
(ஜீனியர் விகடன் - 05.01.2011)

       
 

 

 

 

 

 

     
 
 
 
விதி.!

காலம் அதன் விதிப்படி நடக்கிறது. இயற்கை அதன் விதிக்கேற்பவே இயங்குகிறது. அவரவர் விதியின்படியே வாழ்க்கை அமைகிறது. பிரபஞ்சத்தின் பல்வேறு நிகழ்வுகளும் விதிக்கோட்டின் எல்லைக்கு உட்பட்டே நிர்ணயிக்கப்படுகின்றன. விதியை மீறி எதுவும் விளைவதில்லை. இவ்வளவு வலிமை மிக்க விதியை வகுத்ததும்,வகுப்பதும் யார்? இந்தக் கேள்வியே எல்லாத் தத்துவங்களுக்கும் அடித்தளம்.


 
Copyright © 2008 thamizharuvimanian.com