' மரணம் என் வாழ்வின் வாசற்கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெள்ளப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழிமூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன். அதுதான் 'சுதந்திர இந்தியா' என்ற என் பொற்கனவு. இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்கலாகாது. நம் நாட்டின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள். அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்.'

- தூக்கில் தொங்குவதற்கு முன்பு மாவீரன் சூர்யா சென், தன் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.

பிரிட்டிஷ் சிங்கத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கியவன் சூர்யா சென். இளம் புரட்சிப் போராளிகளின் படை நடத்தி, சிட்டகாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியவன். 37 வயதில் அவன் சிறைப்பட்டபோது, வெள்ளை அதிகாரிகள் சுத்தியல் கொண்டு அவனுடைய பற்கள் அனைத்தையும் உடைத்து, விரல் நகங்களைச் சதையோடு பறித்து, உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பையும் முறித்து, நினைவு தவறிய நிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்டு, உடலை வங்கக் கடலில் வீசியெறிந்தனர். சூர்யா சென், பகத்சிங், சந்திர சேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ், மகாவீர் சிங், மதன்லால் திங்ரா, ராம் பிரசாத் பிஸ்மில், வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற வீர இளைஞர்கள் இந்திய விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தந்தனர். நம் வாழ்கால இளைஞர்களில் பலருக்கு இவர்களின் வரலாறு தெரியாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் நடிகர் விஜய் தெரியும்; விஜயகாந்த்தைத் தெரியும். ஒருவர் நாறிக் கிடக்கும் அரசியலில் நறுமணம் படைக்க வந்தவர். இன்னொருவர் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்த அரசியல் களம் நோக்கி வருபவர். தமிழகத்து அரசியலில் புதிய அத்தியாயம் வரைவதற்கு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

நீண்ட காலமாகவே தமிழர் வாழ்வில் கோடம்பாக்கம், வழிபடும் கோயிலாகிவிட்டது. அரிஸ்டாட்டில் அரசியலை (Master Science) 'தலைமை அறிவியல்' என்றான். நம் வாக்காளப் பெருமக்களுக்குக் கஞ்சிக் கலயமும், காதுக்கு சுகமளிக்கும் பேச்சுக் கச்சேரியும்தான் முக்கியம். ஆட்சிக்கலை குறித்தோ, அரசியல் நிலை குறித்தோ அவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. சங்கத் தமிழன் பேகன்கூட பொதி சுமக்கும் கழுதையின் துயர் கண்டு துடித்துப் போர்வை போர்த்தவில்லை. தோகை விரித்துக் கவர்ச்சி விருந்தளித்த மயிலுக்குத்தான் போர்வை தந்து மகிழ்ந்தான். கவர்ச்சியைக் கொண்டாடுவதில் நாம் அனைவரும் வள்ளல் பேகனின் வாரிசுகள்.

  எம்.ஜி.ஆர் முதல்வரான பின்பு சில திரையுலக கதாநாயகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது. எல்லாரும் எம்.ஜி.ஆராகிவிட முடியாது என்பதை ஏனோ அவர்கள் உணர்வதாக வே இல்லை. கலையுலகில் இருந்தபடி கனவு வெளி யில் சிறகடிக்கும் இவர்கள், தங்கள் திரையுலக மூதாதையரைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். விடுதலை வேட்கை, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதிக்கொடுமை ஆகியவற்றைத் திரைப்படங்களின் மூலம் வெகுமக்களிடம் சேர்ப்பதற்கு முயன்றவர் கே.சுப்பிரமணியம். வெள்ளையர் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் அவர் இயக்கிய 'தியாக பூமி'. சாதி வேற்றுமைகளுக்கு எதிராகவும், விதவை மணத்தை ஆதரித்தும் அவர் தயாரித்த 'பால

யோகினி' படத்துக்காகப் பிராமண சமூகம் அவரை 'சாதி பிரஷ்டம்' செய்தது. சினிமா மூலம் நல்ல சமூகத் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த மாபெரும் கலைஞனுக்கு அரசியல் ஆசை அன்று வரவில்லை.

இசைமேதை கிட்டப்பாவை வாழ்க்கைத் துணையாக ஏற்று 25 வயதில் விதவையாகிவிட்ட கே.பி.சுந்தராம்பாள் கைம்மை நோன்பு பூண்டு, தேனாம்பேட்டை கிராமணியார் தோட்டத்தில் ஆசிரமம் போன்ற வீட்டில் ஒதுங்கி வாழ்ந்தார். அடிமை இந்தியாவில் சுதந்திரக் கனல் சுடர் பரப்புவதற்காக அச்சமின்றி காங்கிரஸ் மேடைகளில் 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்று பாடிய அந்தக் கொடுமுடி கோகிலம் ஒதுங்கி வாழ்ந்தபோது, மகாத்மா காந்தியே நேரில் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். தேச சேவையில் மீண்டும் ஈடுபட வேண்டினார். சுயராஜ்ய கட்சி வெற்றிபெற சத்தியமூர்த்தி முழங்கிய மேடைகளிலெல்லாம் சுந்தராம்பாள், 'ஓட்டுடையாரெல்லாம் கேட்டிடுங்கள்: இந்த நாட்டின் நலம் நாடிப் போட்டிடுங்கள்' என்று பாட்டு யாகம் நடத்தினார். 'வீட்டுக்குள்ளிருந்து - வீண் பேச்சுப் பேசுவதால் - நாட்டின் விடுதலை - நாம் அடையக் கூடுமோ?' என்று மக்களிடையே பாடிப் பாடி சுதந்திர உணர்வைத் தூண்டிய கே.பி.எஸ்., அரசியல் ஆதாயம் அடைய ஆசைப்படவில்லை.

  கலைவாணர் தான் சம்பாதித்த எல்லாவற்றையும் வறியவர்க்கு அள்ளிக் கொடுத்து, அதனால் வறுமையில் வாடினார். திருமணத்துக்கு உதவி கேட்டு வந்த இளைஞருக்கு வெள்ளி கூஜாவை கொடுத்து 'இதைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை' எனச் சொல்லி வழங்கிய வள்ளல். பெரியார் கடுமையாக வெளிப்படுத்திய சுயமரியாதை கருத்துகளை மிகவும் மென்மையாக, சிரிக்கச் சிரிக்க நகைச்சுவை விருந்தாய் நமக்குப் பரிமாறிய அந்த உன்னதக் கலைஞர் சினிமா கவர்ச்சியை மூலதனமாக்கி அரசியல் கடை திறக்கவில்லை.
பகுத்தறிவுக் கொள்கைகளைத் தன்னுடைய நாடகங்கள் மூலம் பரப்பியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'பெரியாரின் தொண்டன்' என்று சொல்லிப் பெருமிதம் கொண்ட ராதா, திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலங்களில் முதல் மனிதனாக வெள்ளைப் புரவியில் அமர்ந்து கழகக் கொடியுடன் வலம் வந்தவர்; பட்டுக்கோட்டை அழகிரியால் 'நடிகவேள்' என்று பாராடப்பட்டவர். அந்த நடிகவேளால் 'கலைஞர்' என்ற சிறப்பை அடைந்தவர் நம் முதல்வர். ராதாவின் வலிமையான நாடகப்
  பிரசாரத்துக்கு அஞ்சி அன்றைய காங்கிரஸ் அரசு, 'நாடகத்தின் முழுமையான கதை வசனத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் முதலிலேயே சமர்ப்பிக்க வேண்டும்' என்று சட்டம் தீட்டியது. ஒரு தனி மனிதனின் கூர்மையான விமர்சனங்கள் ஆட்சியையே அன்று அலைக்கழித்தது. இந்தியாவிலேயே ராதாவுக்கு இணையாக மக்களின் சிந்தனையில் மறுமலர்ச்சியை உருவாக்க ஒரு சமூகப் போராளியாய் வீறுகொண்டெழுந்த இன்னொரு கலைஞன் இல்லை. 'நடிகர்களை நம்பாதே' என்று மேடைதோறும் மக்களின் மயக்கத்தை ஒழிக்க ஓங்கிக் குரல் கொடுத்த நடிகவேள் அரசியலில் எந்தப் பதவிக்காகவும் எவரிடத்தும் பல்லிளிக்கவில்லை.

ஆனால், இன்று... கோட்டை நாற்காலிக் கனவில் எத்தனை கோடம்பாக்கத்து நாயகர்கள்? சினிமாவில் மார்க்கெட் போனதும், அடுத்த பிழைப்பாக நினைத்தல்லவா அரசியலில் குதிக்கிறார்கள்! ஆட்சி நாற்காலிப் பேரின்ப வாசல் நோக்கி அடியெடுத்து வைக்கின்றார் கள்! எம்.ஜி.ஆர் என்ற துருவ நட்சத்திரத்தைப் போல் மின்ன நினைக்கும் இவர்களில் பலர் வெறும் எரிநட்சத்திரங்களே!

விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக், டி.ராஜேந்தர் போன்றவர்கள் எந்த நம்பிக்கையில் அரசியல்

அங்காடியில் ஆளுக்கொரு பெட்டிக்கடை வைத்து அமர்ந்திருக்கின்றனர்? அதிகபட்சம் இவர்கள் ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்; முடிந்தால் அமைச்சராக வேண்டும்; வாக்காளர்கள் விவரமே இல்லாத இளிச்சவாயர்களாக இருப்பதைப் பயன்படுத்தி என்றாவது ஒரு நாள் தமிழகத்தின் முதல்வராக வேண்டும். இதற்கு மேல் இவர்களுக்கு என்ன சமூக அக்கறை? இவ்வளவு நாட்கள் இல்லாத கரிசனம் இன்று எப்படி இந்த ஏழைகள் மேல் வந்தது?

இத்தனை ரட்சகர்கள் போதாது என்று விஜய் எந்த அடிப்படைத் தகுதிகளோடு புதிய ரட்சகராகப் புறப்பட்டுவிட்டார்? 'விதியே, விதியே! தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?' என்று பாரதி அன்று புலம்பியதன் அர்த்தம் இன்றல்லவா புரிகிறது.

வங்கத்தில் ஆளுநராக இருந்து விடைபெற்றபோது மலை போல் குவிந்த பரிசுப் பொருள்களில் எதையும் ஏற்க மறுத்தார் ராஜாஜி. 'தந்தத்தாலான கைத்தடியையாவது எங்கள் அன்பின் அடையாளமாக எடுத்துச் செல்ல வேண்டும்' என்று வேண்டிய போதும், அதை மறுதலித்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர் அந்த மூதறிஞர். ராமாயணத்து ஜனகனைப் போல் முதல்வர் நாற்காலியில் பற்றற்ற துறவியாய் அமர்ந்து பரிபாலனம் செய்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். தன் சொத்துகள் முழுவதையும் வடலூர் வள்ளலார் சபைக்கு எழுதிவைத்த ஏந்தல் அவர். பூரண மதுவிலக்கை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்திய முதல்வர் குமாரசாமி ராஜா, தான் வாழ்ந்த வீட்டையும், சொத்து களையும் தமிழகத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். தன் எஞ்சிய சொத்தாக வங்கியில் இருந்த 50 ரூபாயையும் பாரதி நினைவு மண்டபம் கட்ட நன்கொடையாகத் தந்துவிட்டு, கையை விரித்தபடி கண்மூடிய ராஜா ஓர் அரிய தலைவர். 10 வேட்டி சட்டையுடன் தன் வாழ்வை முடித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜர் கறுப்பு காந்தியாகவே நம்மிடையே வாழ்ந்து மறைந்தார். இவர்கள் அனைவரும் வளர்த்த காங்கிரஸ் இன்று நடிகர் விஜய்யின் நிழலில் இளைப்பாற இருக்கிறது. விவேக் ஒரு படத்தில் சொன்னதுபோல் 'எப்படி இருந்த காங்கிரஸ் இப்படியாகிவிட்டது'!

 

சொந்தப் பணத்தைச் சேதப்படுத் தாமல் காங்கிரஸ் கணக்கில் அரசியல் நடத்தி அதிகாரத்தைச் சுவைக்க நினைக்கும் விஜய், ஒருவகையில் விஜய்காந்த்தைவிட விவரமானவர் என்று கருதி மகிழலாம். ஆனால், நடந்தால் நிழல் மட்டுமே தொடரக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள், ரசிகர் பட்டாளத்துடன் வரும் விஜய்யை ரசிக்கமாட்டார்கள். சிவாஜிகணேசனுக்கு கிடைத்த காங்கிரஸ் அனுபவங்களை விஜய் அறிந்திருக்க நியாயமில்லை. ஓர் அங்குலம் உயரமானவனைக்கூட ஒப்புக் கொள்ளாத குள்ளர்களின் சாம்ராஜ்ஜியம்தான் தமிழக காங்கிரஸ். அங்கே நீண்ட காலம் விஜய் நீடிக்க முடியாது. நீடித்தால் இந்தப் புதிய ரட்சகர் அவமானச் சிலுவையில் அறையப்படுவார்.

அது சரி... விஜய்க்கு ஏன் இந்த ஆசை? அவரிடம் ஏதாவது புதிய அரசியல், சமூகப் பொருளாதார மாற்றுத் திட்டங்கள் இருந்தால் முதலில் அவற்றை அறிவிக்கட்டும். முதல்வர் கனவைத் தவிர வேறெதுவும்

இல்லையென்றால், இப்போதே இந்த நெட்டைக் கனவை விட்டு விட்டு, தமிழ் சினிமா பக்கமே தன் கவனத்தை வைத்திருக்கட்டும்!


( நன்றி: ஜூவி )
 

 

 

 

 

     
 
 
 
மனித மாளிகையின் மைய மண்டபம்தான் மனம்.!

மனிதனை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் மிக்கது மனம். அதுதான் அவனை ஆசைப்பட வைக்கிறது. அதுவே அவனைக் கவலையில் ஆழ்த்துகிறது. மனம் அடங்காத ஆற்றைப் போல் அலை புரளும்; கட்டற்ற காற்றைவிட வேகம் கொள்ளும்; ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் குரங்கைப் போல், கிளை விட்டுக் கிளை தாவும். பண்பட்ட மனம், மனிதர்களை கடவுளாக்கும். பாழ்பட்ட மனம் மாந்தரை மிருகமாக்கும்.

மரணத்தின் நிழல் நம்மீது நீளும் இறுதி நாள் வரை மனம் ஒரு கணமும் ஓய்வதில்லை. `சும்மா இரு மனமே’ என்று யோகிகள் சொல்லிப் பார்த்தனர். மனமா சும்மா இருக்கும்? மனம் மட்டும் சும்மா இருந்துவிட்டால், மனிதனுக்குச் சுகமும் இல்லை; சோகமும் இல்லை.

நதி என்றால் இரு கரைகள் இருக்கும். வாழ்க்கை நதிக்கு சுகமும் சோகமும்தான் இரு கரைகள். சுகமும் சோகமும் மனத்தின் மாய சிருஷ்டிகள். முள்ளை விதைப்பது மனமே. மலரைச் சொரிவதும் மனமே. மனித மாளிகையின் மைய மண்டபம்தான் மனம்.


 
Copyright © 2008 thamizharuvimanian.com