நண்பர்கள் இல்லாதவர்கள் நரம்பற்ற வீணைக்கு ஒப்பானவர்கள். நண்பர்கள் பலவிதம். கருணை பொழியும் அன்னையாய் ஒருவர்; அடிமை போல் சேவகம் செய்யும் ஒருவர்.

ராகங்கள் வெவ்வேறு என்றாலும், பாடல் என்னவோ அன்பென்ற ஒன்றுதான்!

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை, சாட்சி இல்லாத மரணம் மாதிரி. நம்மிடம் பழகும் அனைவரும் நம் நண்பர்கள் இல்லை. நட்புக்கு நல்லடையாளம் வெறும் அறிமுகம் அன்று; எதையும் இழக்க சம்மதிக்கும் ஆழமான அன்பு!

 

ஒன்றாகச் சேர்ந்து சினிமா பார்ப்பதும், தேநீர் அருந்துவதும், கடற்கரை மணலில் கனவுகளைப் பகிர்ந்து கொள்வதும் பழக்கத்தை வளர்க்கலாம். இவற்றால் மட்டும் ஆழமான நட்பு அரங்கேறுவது இல்லை. உடன் வந்து பொழுதுபோக்குபவரிடம் இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமேயன்றி, இதயத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது.

சுயநலமற்ற அன்பில்தான் நட்பு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். நண்பர்கள் வேறு; கூட்டாளிகள் வேறு; தோழர்கள் வேறு. ஒரே மாதிரியான ரசனை போதும், ஒருவரிடம் தோழமை கொள்வதற்கு! ஒரு பொதுவான நோக்கம் போதும், கூட்டாளியாய் இருப்பதற்கு! ஆனால், அழிவற்ற நட்புக்கு இன்னும் நுணுக்கமான ஆழ்ந்த அன்பு அவசியமாகிறது.

கணவனும் மனைவியும்கூட நண்பர்களாக இருக்க முடியும். அதற்கு இருவரும் திறந்த புத்தகங்களாக இருக்க வேண்டும். `மனைவி

அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றார் கண்ணதாசன். மனைவி மட்டும்தானா? நண்பர்கள் அமைவதும் அவன் கொடுத்தவ ரமே!

வாய்த்த நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை வளம்பெறுகிறது. அவர்களே தீயவர்க ளாக அமைந்துவிட்டால், மொத்த வாழ்க்கையும் இருண்டு விடுகிறது. வாழ்க்கை நதியின் போக் கையே நட்பு மாற்றிவிடுவதால், வள்ளுவர் அதை நான்கு அதிகாரங்களில் ஆய்ந்திருக்கிறார். வார்த்தைச் சிக்கனம் மிக்க வள்ளுவர், நாற்பது குறளை நட்புக்குச் செலவழித்திருப்பதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்திவிடுகிறார்.

கையில் ஒருமுறை பச்சை குத்தினால், காலனின் கடிதம்வந்து, கனலில் வெந்து நீராகும் வரை அது மறைவதில்லை. நட்பும் பச்சை குத்துவது போன்றதே. மோசமான நண்பர்களை உதறிவிட்டாலும், அந்த நட்பின் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் நம்மோடு நடைபோடும்.

ஆயிரம் பேரிடம் நமக்கு அறிமுகம் நேர்ந்தாலும், ஆழமான நட்புக்குரியவர்கள் ஆறு பேர் தேறமாட்டார்கள். சோதனை நம்மைச் சந்திக்கும் சூழலில் சுயநல நட்பு சொல்லிக்கொள்ளாமலே கழன்று போகும். வாழ்க்கையை வியாபாரமாகக் கருதி சூதாட்ட வெறியோடு விளையாடுபவர்களிடம் உண்மையான நட்பு ஒரு பாதும் உருவாகாது. அன்பின் ஆதிக்கத்தில் தன்னலம் தகர்ந்து போகும். தன்னலத்தின் ஆளுகையில் அன்பு அழிந்து போகும்.

அன்புதான் இன்பம். அன்புதான் சிவம். அன்பில் கனிவதுதான் நல்ல நட்பு. அந்த நட்புக்கு நாளும் நேரமும் ஒதுக்குங்கள். வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க அதுதான் வழி!

 

 

 

 

 

 

 

 

 

 

     
 
 
 
வீணையில் வாழ்க்கையைப் படிப்போம்.!

நம் வாழ்க்கையும் வீணைதான். இதில் ஆசை நரம்புகள் அதிகம் தளர்ந்து விடாமலும், பேராசையால் நிரம்ப முறுக்கேறாமலும் நடுப்பாதையில் வாசித்துப் பழகுவோம். `கலைமகள் கைப் பொருளே’ என்று பாடுவதில் பயனில்லை வீணையில் வாழ்க்கையைப் படிப்போம்.


 
Copyright © 2008 thamizharuvimanian.com