`நாங்கள் பார்க்காத பதவி இல்லை. பதவி என்பது எங்களுடைய கடும் பயணத்தில் இளைப்பாறுவதற்குக் கிடைத்த ஒரு நிழல். இதுவே நிரந்தரம் என்று கருதி ஏமாறும் ஆட்களல்ல நாங்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றித் தந்த சுடர் விளக்கைக் கையிலேந்தி, மழையால் அது நனைந்து விடாமல், சூறாவளியால் அது மாய்ந்து விடாமல், அந்த ஒளிக் கற்றையை எங்களுடைய இன்னொரு கை கொண்டு காத்து, அந்தச் சுடர் விளக்கைக் கரடுமுரடான  பாதையில் காட்டாறுகளைத் தாண்டிக் கொண்டு போய் அதைக் குன்றின் மேலிட்ட விளக்காக பேரறிஞர் அண்ணாவின் லட்சிய தீபமாக ஏற்றி வைக்கின்ற அந்தப் பணிதான் தி.மு.கழகத்தின் முக்கியப் பணியே தவிர, இடையிலே வருகிற இந்தப் பதவிகள் அல்ல!’
-கலைஞரின் வாக்குமூலம் - `முரசொலி’ 7.7.1981

காலத்தின் வேகமான ஓட்டத்தில் கலைஞர் இப்படிப் பேசி 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. தன்னுடைய 86-வது  பிறந்தநாளில்கூட `மாநில சுயாட்சி’ எனும் உரிமை முழக்கத்தை வலிமை மிக்க முழக்கமாக மாற்றப் போவதாகவும், அண்ணா கண்ட அந்தக் கனவை நனவாக்க இடையறாது பாடுபடப் போவதாகவும் சூளுரை செய்திருக்கிறார் அவர்.


சமீபத்தில் டெல்லி சென்று அவர் அடைந்த கசந்த அனுபவங்களுக்குப் பின்பு, பயன்படுத்தாமல் இதுவரை துருப்பிடிக்கும் வண்ணம் மூலையில் போட்டு வைத்திருந்த `மாநில சுயாட்சி’ போர்வாளைக் கையில் எடுத்திருப்பதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்க வேண்டும். மாநில சுயாட்சி முழக்கம் தன் குடும்ப உறவுகளுக்கு மத்திய அரசில் கூடுதல் பதவிகளைப் பெறுவதற்காகவா? அல்லது உண்மையிலேயே தமிழகம் அதிக உரிமைகளை அடைவதற்காகவா? தமிழகம் அதிக உரிமைகளை அடைவதற்காகத்தான் என்றால், இதுவரை அந்த உரிமைக்குரல் எங்கே போயிருந்தது?

தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற கலைஞர், 1974 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப் பேரவையில் `வெள்ளை அறிக்கை’ சமர்ப்பித்தார். அதில், `இந்திய நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களிடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலவாணி ஆகியவை தொடர்பான அதிகாரங்களை மட்டும் கொண்டுள்ள மத்திய அரசும், எஞ்சிய அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்கள் அனைத்தையும் கொண்ட மாநில அரசுகளும் உள்ள உண்மையான கூட்டாட்சியை நிறுவ வேண்டும். இந்த லட்சியத் துடன் தமிழ்நாடு அரசு ராஜமன்னார் குழுவின் பரிந்து ரைகளை ஆய்ந்தபின், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளிலும், அதிகாரப் பட்டியல்களிலும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை வகுத்துத் தொகுத்துள்ளது. இதன் விளைவான வேறு மாறுதல் களையும் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்தல் வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.

வெள்ளை அறிக்கையை சட்டப்பேரவையில் வைத்ததோடு கலைஞர் அரசு நின்றுவிடவில்லை. `மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அளித்திருக்கும் கருத்துகளை மத்திய அரசு ஏற்று, மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியலைமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி மூன்று முறை சட்டப்பேரவையில் `ஐயகோ! தமிழினம் அழிகிறதே’ என்ற கலைஞரின் அவலக் குரலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போலவே... 1974 -ல் கொண்டு வந்த மாநில சுயாட்சித் தீர்மானமும் கவனிப்பாரற்று மரணித்துப் போனது. மாநில சுயாட்சியை அடையும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைக்க பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் கலைஞர். அந்த குழுவில் ஏ.லட்சுமணசாமி முதலியாரும், பி.சந்திரா ரெட்டியும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் ஆலோசனைகளை அலசி ஆராய்ந்து பார்க்க இரா.செழியன் தலைமையில் வேறொரு குழுவும் அமைக்கப்பட்டது. ராஜமன்னார் குழு அளித்த அறிக்கையில் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து  256, 257, 339 (2) போன்ற ஷரத்துகள் நீக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 256 - வது பிரிவு `நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களை மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு’ என்கிறது. இந்தப் பிரிவை நீக்கினால், இந்தியர் அனைவருக்கும் பொதுவான நாடாளுமன்றம் ஒன்று தேவையில்லை என்ற நிலையே கிட்டத்தட்ட உருவாகும். 257 -வது பிரிவு, `சில விஷயங்களில் மத்திய அரசு பிறப்பிக்கும் தாக்கீதுகளை மாநில அரசுகள் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும்!’ என்கிறது. மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு செயல்படுவதைத் தடுக்கும் இந்தப் பிரிவை நீக்கும்படி ராஜமன்னார் குழு வலியுறுத்தியது. 339 (2)-வது பிரிவு, `தாழ்த் தப்பட்ட மக்களின் நல்வாழ்வு பற்றிய பிரச்னைகளில் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரம் உண்டு’ என்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றது ராஜமன்னார் குழு.

1974 -ல் கலைஞர் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய `மாநில சுயாட்சி’ தீர்மானத்துக்கு மத்திய அரசு எந்த மரியாதையும் தரவில்லை.

மருந்துக்கும் மரியாதை தராத இந்திராகாந் தியை, `நெருக்கடி காலத்தில் தி.மு.கழகத்தையே முற்றாக அழிக்கத் திட்டமிட்ட’ காங்கிர￞ தலைவியை, 1980 - ல் நடைபெற்ற தேர்தலின் போது... `நேருவின் மகளே வா! நிலையான ஆட்சியைத்தா!’ என்று பரவசத்துடன் பல்லாண்டு பாடி அவரோடு கூட்டணி அமைத்து, கொள்கையைத் தியாகம் செய்தவர்தானே கலைஞர்!

அவர்தான் இன்று சில அரசியல் ஆதாயங்களுக்காக `மாநில சுயாட்சி’ வேண்டி முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்தநாளில் மறுபிரகடனம் செய்திருக்கிறார். நிழல் போருக்கு நிச்சயத் தாம்பூலம் நடத்துவதில் கலைஞருக்கு இணை சொல்ல இன்னொருவர் இல்லை!

`அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று கோஷமிட்ட தானைத் தலைவர்கள், திராவிட நாடு கோரிக்கையைத் தீக்கிரையாக்கிவிட்டு, ம.பொ.சி -யின் மாநில சுயாட்சியைத் தத்தெடுத்துக் கொண்ட வரலாறே மிகவும் சுவையானது.

மாநில சுயாட்சியின் பிதாமகன் ம.பொ.சி. ஆக￞ட் 20, 1969 - ல் சுயாட்சிப் போராட்டத்தை நடத்த முனைந்தபோது, அந்தப் போராட்டத்தைக் கைவிடும்படி சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்தவர் கலைஞர். `ராஜமன்னார் குழுவின் அறிக் கைக்குப் பின்பு மத்திய அரசின் அணுகு முறையில் மாற்றம் நேராவிடில் சேர்ந்து போராடு வோம்’ என்றவர் கலைஞர்.

``நாளைக்கே தி.மு.கழகத்தைப் பார்த்து `நீ மாநில சுயாட்சி கேட்கிறாய். ஆகவே உன் அரசாங் கத்தைக் கலைக்கிறேன்’ என்று டெல்லியிலிருந்து உத்தரவு வருமேயானால், அதைவிட என்னுடைய வாழ்க்கையில் புனிதமான சரித்திர சம்பவம் வேறெ துவும் இருக்க முடியாது. எனக்கோ, சிலம்புச் செல்வ ருக்கோ போராட்டம் புதியதல்ல. பழக்கப்பட்ட ஒன்று. சிறைச்சாலை நாங்கள் போய்வந்த பழைய வீடுதான்...’’ என்று 28-4-74 அன்று மயிலைப் பொதுக்கூட்டத்தில் மாநில சுயாட்சிக்காக வீர முழக்கமிட்டவரும் கலைஞர்தான்.

திருச்சி ஒத்தக்கடை வீதியிலும், மதுரை ஜான்சிராணி திடலிலும் நின்று கொண்டு மாநில சுயாட்சிக்கு மங்களம் பாடியதுதான் அண்ணாவின் லட்சிய தீபத்தை அணையாமல் காத்து வந்த காரியமா? நெருக்கடி காலத்தில் இந்திரா அரசு ஏற்கெனவே இருந்த மாநில உரிமைகளைப் பறித்ததே...? கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதே...? இழந்தஅந்த உரிமைகளை முதலில் மீட்டெடுக்க நம் முதல்வர் முயன்றாரா?

வெவ்வேறுபட்ட மதம், மொழி, கலாசாரப் பாரம்பரியம் மிக்க தேசிய இனக்குழுக்களை உள்ளடக்கிய இந்திய மண்ணில் சமஷ்டி அமைப் புதான் சரியான அரசியல் நடவடிக்கையாகும். அமெரிக்காவில் 1781 - ம் ஆண்டிலேயே சமஷ்டி அமைப்பு அரங்கேறி விட்டது. ரஷ்யா, கனடா, ஜெர்மனி, ஆ￞திரேலியா, தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகள் சமஷ்டி தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிட்டன. இந்தியா முழுமையான ஒற்றையாட்சியோ, முழுமையான கூட்டாட்சியோ, இல்லாத (Quasi-federal) `இரண்டும் கலந்த’ அரசியலமைப்பைக் கொண்டது.

விடுதலைப் போராட்ட வேள்வியின் போது காங்கிர￞ கூட்டாட்சி அமைப்பை அறிமுகப்படு த்தவே விரும்பியது. இந்தியஒருமைப்பாட்டுக்கு பங்கம் நேராதபடி மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைப் பரவலாக்கவே அது திட்டமிட்டது. நேதாஜியின் தலைமையில் நடந்த திரிபுரி (மத்திய பிரதேசம்) காங்கிர￞ மாநாட்டில், `பாதுகாப்பு, போக்குவரத்து, அயல் நாட்டுறவு மூன்றையும் மத்திய அரசிடம் விட்டுவிட்டு, மற்ற அனைத்து அதிகாரங்க ளையும் மாநிலங்களுக்குத் தரவேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. மகாத்மா காந்தியும், `இந்தியா முழுமைக்கும் எவ்வித சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அவ்வித சுதந்திரம் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்க வேண்டும்’ என்றார்.

பட்டாபி சீதாராமையா எழுதிய காங்கிர￞ வரலாற்றிலும் சுயாட்சி பற்றிய விளக்கம் இடம்பெற்றி ருக்கிறது. ஜனநாயகக் காவலர் நேரு ஒரு கட்டத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் சமமாக பாவிக்கப்படும் சமஷ்டி (குநனநசயட) முறையை விட, மாநில அரசுகளுக்குக் கட்டுப்பட்ட மத்திய அரசைக் கொண்ட கூட்டாட்சி (ஊடிகேநனநசயவடிை)ே முறையை நம் நாட்டில் நடைமுறைப்படுத்த விரும்பினார். ஆனால், அவருடைய விருப்பத்துக்கு சாதகமாக நாட்டின் நிலைமை அன்றில்லாமல் போனது.

`குறைந்த அதிகாரங்களை வைத்துக் கொண்டே... ஒரு குட்டி சுல்தான் போன்று ஆட்சி நடத்தி கோடிக்கணக்கில் பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்கும் அருவருப்பான மனிதர்களிடம், பிரிந்து போகும் அளவு அதிகாரம் உடைய ஒரு மாநில அரசை இனி வரும் நாட்களில் மக்கள் ஒப்படைத்தால் நாட்டின் கதி என்னவாகும்?’ என்ற அச்சம் நேருவுக்கு வந்திருக்கலாம். அம்பேத்கரும் பலவீனமான மத்திய அரசு அமைந்தால், பாரதம் துண்டாடப்படும் என்று அஞ்சியிருக்கலாம். விளைவு... எஜமான மத்திய அரசும், எடுபிடி மாநில அரசுகளும் அமைவதற்கேற்ற அரசியலமைப்புச் சட்டம் உருவாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ... தன்னை ஓர் அடிமை என்று ஈழப் பிரச்னையில் ஆதங்கப்பட்டார் `சுயமரியாதை இயக்கத் தலைவர்’ கலைஞர்!


இலங்கைத் தமிழர் பிரச்னையில் தீர்வுகாண ௫௬ ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டே இருக்கும் தமிழினத் தலைவர், மாநில சுயாட்சிக்குத் தீர்வு காண முப்பத்தைந்தாண்டுகளாக முயன்று கொண்டே இருக்கிறார். மாநில சுயாட்சியும் நிச்சயம் கலைஞரால் `தீர்ந்து’ போகும் என்று நாம் தாராளமாக நம்பலாம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்: `தண்ணீரில் முதலை நீந்திக் கொண்டிருந்தாலும், அதன் நினைவு முழுவதும் நிலத்தில் வைத்திருக்கும் முட்டைகளின் மீதுதான் இருக்கும்.’


 

 

 

 

 

     
 
 
 
பாதி அறிவு அறியாமையைவிட மோசமானது.!

அறியாமை கலப்பற்ற அறிவுதான் ஞானம். எல்லா இழிவுகளிலும் பெரிய இழிவு அறியாமைதான். அறியாமையில் மூழ்கிக் கிடப்பவருக்கு, இன்பத்தின் பாதை துன்பமாகத் தெரியும். துன்பத்தின் இருப்பிடம் இன்பமாகப் புரியும். அரைகுறை அறிவு, முழுமையான முட்டாள் -
தனத்தைவிட ஆபத்தானது. முட்டாளுக்கு எதுவுமே தெரியாது. அரைகுறை அறிவாளிக்கு அனைத்தும் தவறாகவே புரியும். பாதி உண்மை முழுப்பொய்யைவிட மோசமானது என்பது போல், பாதி அறிவு அறியாமையைவிட மோசமா
- னது.


 
Copyright © 2008 thamizharuvimanian.com