பொது வாழ்வில் தூய்மை, நேர்மை வேண்டு மென இளைஞர்கள் மத்தியில் காந்திய பிரசாரம் செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் தமிழருவிமணியன். ``இரண்டு வருடங்களில் தமிழகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம்’’ என்கிறார்.தமிழ்நாட்டில், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி நிச்சயம் என்று தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கருதுகின்றன. ஸ்பெக்ட்ரம் மற்றும் வேறு பல ஊழல்கள், பீகார் தோல்வி ஆகியவற்றுக்குப் பிறகும் காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு சுகமா? சுமையா?

தமிழருவி மணியன்: ``1971ல் காமராஜரை அரசியலை விட்டு ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்தார் கருணாநிதி. காமராஜ்கடைசியாகச் சந்தித்த தேர்தல் அது. அப்போது காமராஜ் தலைமையில் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் பெற்ற வோட்டு 35 சதவிகிதம். அப்போது 35 சதவிகிதமாக இருந்த காங்கிரஸ் வோட்டு, இன்று ஏழு சதவிகிதத்துக்கும் கீழே அதாவது விஜயகாந்துக்கும் குறைவா கப் போய் விட்டது என்பதுதான் உண்மை. காங்கிரஸுக்கு மரபு சார்ந்த வாக்காளர்கள்தான் உண்டே தவிர, ஸ்தாபன ரீதியான பலம் கிடையாது. அது ஆழ வேரூன்றி நிற்கும் அசையாத ஆலமரம் அல்ல; வேரில்லாத நீர்ச்செடிதான். பீகாரில் இளைஞர்களை காங்கிரஸுக்கு இழுத்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவர ராகுல் முயன்றார். ஆனால், அமைப்பு இல்லாததால் தோல்வியடைந்தார். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வேண்டுமானால் தொகுதிக்கு 5000 வோட்டு காங்கிரஸுக்கு இருக்கக்கூடும். காங்கிரஸ் இனி தமிழ்நாட்டில் சுமைதான். அதுவும் தே.மு.தி.க ஓரளவு செல்வாக்கு பெற்று வரும் நிலையில் `காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி!’ என்ற மாயை விலகிவிட்டது. அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., புதிய தமிழகம், த.மு.மு.க., என அணி அமைந்தால் அதுவே வெற்றிக் கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் இதுபோன்ற ஓர் அணிக்கு வோட்டு போடும் மனநிலைக்கு வந்து விட்டார்கள் என்பதே என் கணிப்பு.’’

மாறிவரும் அரசியல் சூழலில் தி.மு.க., காங்கிரஸைக் கை கழுவுமா?

``சான்ஸே இல்லை. காரணம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் துணிவு தி.மு.க.வுக்குக் கிடையாது.அந்த அளவு பலவீனங்கள் அந்தக் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் உண்டு. காங்கிரஸ் துரத்தி விட்டால்தான் உண்டு. பீகார் தேர்தலுக்குப் பிறகு தமிழ் நாட்டில் மூன்றாவது அணி சிந்தனை ராகுலுக்குக் கூட இருக்குமா என்பது சந்தேகமே. விஜயகாந்தும் பா.ம.க.வும் காங்கிரஸ் தலைமையில் தனி அணி என்ற கருத்தோட்டத்தில் இருந்தன. இப்போது அந்தச் சிந்தனை இல்லை. தி.மு.க.வும் காங்கிரஸும் ஓரணியில் இருப்பதே நல்லது. அப்போதுதான் `ஊழல் அணி’ என்ற ஒட்டுமொத்த பிரசாரமும் எடுபடும்.’’

விஜயகாந்த் தனியே நிற்கத் துணிவாரா?

இந்தமுறை அந்தத் தவறைச் செய்ய மாட்டார் என்று கருதுகிறேன். காரணம் `தி.மு.க.வை ஆட்சியை விட்டு இறக்குவதே என் இப்போதைய அஜன்டா’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார். எனவே வெற்றிக்கு வழிகாட்டும் அ.தி.மு.க. அணியுடன் அவர் தோழமை கொள்வார். மக்கள் மனத்தைப் புரிந்து கொள்ளாமல் தனித்துச் செயல்பட்டால் மக்கள் மத்தியில் இருக்கிற மரியாதை போய்விடும். காலப்போக்கில் கட்சியும் காணாமல்...’’

வரும் காலத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு மாற்று?

``இன்றுவரை தெரியவில்லை. காலம் வெற்றிடத்தை நிரப்பும். ஆனால், திராவிட இயக்கக் கட்சிகளின் குணாம்சங்கள் கொண்ட விஜயகாந்த் நிச்சயம் அந்த மாற்று சக்தி அல்ல’’

`கருணாநிதிக்கு உள்ள ஜன நாயக முறையிலான அணுகுமுறை ஜெ.வுக்கு இல்லை. அவர் சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்படுவார்’ என்ற கருத்து இருக்கிறதே?

`` இன்றைய சமூகம் ஆணாதிக்க சமூகம்தான். எனவே ஆணாதிக்க அச்சுறுத்தல் காரணமாகத்தான் சர்வாதிகாரி போல் நடக்க முற்படுகிறார் ஜெயலலிதா. இந்திரா காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி என்று அரசியல் தலைமையேற்று நடத்தும் பெண்களிடம் உள்ள பொதுத் தன்மை இது. இப்படிப்பட்ட ரிங் மாஸ்டர் தன்மை இல்லாவிட்டால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். நீங்கள் சொல்வது போல் கலைஞரை எளிதில் அணுகலாம் என்பது சரியல்ல; சந்திக்க நேரம் கேட்டு மாதக்கணக்கில் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். கலைஞரிடம் வெளித்தோற்றம் மட்டுமே ஜனநாயகம். மறைந்து நிற்பது சர்வாதிகாரம்.’’

`செய்த சாதனைகள் காரணமாக மீண்டும் தி.மு.க.ஆட்சியே’ என்கிறாரே கருணாநிதி?

``இலவசத் திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்தார்கள் என்பது ஒருமாயை; இன்று சகல மட்டங்களிலும் ஊழல்; விலைவாசி உயர்வு, தமிழகத்தைப் பட்டா போடும் கலைஞர் குடும்பம் என்று மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். கருணாநிதிக்கு ஓய்வு கொடுத்து அனுப்பப்போவது நிச்சயம்.

-- தமிழருவி மணியன்
(கல்கி - 19.12.2010)

       
       
 
 
 
வாழ்க்கை இலக்கணங்கள்.!

ஒரு சமூகத்தின் உயர் ஒழுக்கங்களின் உண்மையான வெளிப்பாடுதான் பண்பாடு. மனிதர்களின் நற்சிந்தனையும், நற்சொல்லும், நற்செயலுமே அதற்குரிய நல்ல அடையாளங்கள். எளிமையாக வாழ்வது, நேர்மையாக நடப்பது, தூய்மையாகச் செயல்படுவது, பிற உயிர்களுக்கு உதவியாக இருப்பதுதான் நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த வாழ்க்கை இலக்கணங்கள். ஆனால், நாம் இன்று கோடுகளைத் தாண்டிய கோலங்களாகிவிட்டோம். நம் வாழ்க்கை இன்று ஆடம்பர சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டது. அகத்தில் கறுத்தும், புறத்தில் வெளுத்தும் வஞ்சகமாக நடப்பதே வாழ்க்கைச் சாமர்த்தியமாகிவிட்டது. பணத்தின் பலிபீடத்தில் நியாயங்களும், தர்மங்களும் வெட்டுப்பட்டுக் குற்றுயிராய் வீழ்ந்துகிடக்கின்றன. யாரைப் பற்றியும் கவலைப்படவோ, கண்ணீர் சிந்தவோ யாருக்கும் நேரமுமில்லை; மனமுமில்லை. மண்ணில் மனித வாழ்க்கை எந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.


 
Copyright © 2008 thamizharuvimanian.com