பெற்றோர்: பட்டம்மாள் - முருகேசன்

கல்வி பயின்ற பள்ளி: இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டிப் பள்ளி.
பெரம்பூர், சென்னை

பயின்ற கல்லூரிகள்: அரசினர் கலைக்கல்லூரி, அண்ணா சாலை, சென்னை - பி.யு.சி
மாநிலக் கல்லூரி, சென்னை - பி.எஸ்.சி, (புவியியல்)
சென்னைப் பல்கலைக் கழகம் - எம்.ஏ., (வரலாறு)
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சென்னை - பி.டி
சட்டக்கல்லூரி, சென்னை - பி.எல்.,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - எம்.எட்.,

பணி: வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

அரசியல்: மாணவர் பருவத்தில், மாநிலக்கல்லூரியில் பயின்றபோது மாணவர் காங்கிரசில் சேர்ந்து அரசியல் பணியில் (1966) ஈடுபடத் தொடங்கி, இன்றுவரை இடையறாது அரசியல் தளத்தில் இயங்குதல்.

கலைக்கல்லூரியில் பி.யு.சி. படித்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மிகத் தீவிரமான பங்கேற்பு. பள்ளிப் பருவந்தொட்டே தமிழ் மொழியின் மீது எல்லையற்ற காதல்.

தமிழருவி: பொதுத்தேர்தல் 1971-இல் நடந்தபோது பெருந்தலைவர் காமராஜர், இலக்கியம் சார்ந்த ஆரோக்கியமான அரசியல் ஆய்வுரையைக் கேட்டு நெகிழ்ந்து `தமிழருவி’ என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பித்தார். அன்று முதல் தமிழருவி மணியன் என்று தமிழ் கூறும் நல்லுலகில் அறிமுகம்.
 

அரசியல் பொறுப்புகள்: காங்கிரசில் முதலில் பொதுக்குழு உறுப்பினர். பா.ராமச்சந்திரன் தலைமையில் பெருந்தலைவர் மறைவுக்குப் பின்பு உருமாற்றம் பெற்ற ஸ்தாபன காங்கிரசில் செயற்குழு உறுப்பினர். ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவாகப் பெயர் மாற்றம் கொண்டபின்பும்,

 

ஜனதாதளமாக நீடித்த போதும் பல்லாண்டுகள் மாநிலப் பொதுச்செயலாளர். ஜனதா தளத்தின் தலைவர் தேர்தலில் தலைமை கையாண்ட சில நெறிக்கு மாறான தவறுகளால், வெற்றி வாய்ப்பை ஏழு வாக்கு வித்தியாசத்தில் இழத்தல். அறம் சார்ந்த அரசியல் புறக்கணிக்கப்பட்ட சூழலில் ஜனதா தளத்திலிருந்து விடுபட்டு, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடல்.

இராமகிருஷ்ண ஹெக்டே தொடங்கிய `லோக் சக்தி’ இயக்கத்தின் தமிழகப் பிரிவின் தலைவராக அரசியல் பணியைத் தொடர்தல் - மதவாத பாரதிய ஜனதாவின் மந்திரிசபையில் ஹெக்டே இடம்பெற்றதை எதிர்த்து இயக்கத்திலிருந்து வெளியேற்றம்.

மூப்பனார் அழைப்பு: தமிழ் மாநில காங்கிரசைத் தொடங்கி நடத்திய ஜி.கே.மூப்பனார் பலமுறை விரும்பி, வற்புறுத்தி அழைத்ததால், `காமராஜ்ஆட்சி’ அமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிக்கு உறுதுணையாக அவருடன் இணைந்து இயக்க வளர்ச்சியில் ஈடுபடல். தமிழ் மாநில காங்கிரசின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றல்.

மூப்பனார் மறைவுக்குப் பின்பு ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் அகில இந்திய காங்கிரசுடன் இணைந்த பின்பு, தமிழ் நாடு காங்கிரசின் பொதுச்செயலாளராகவும், அகில இந்திய காங்கிரசின் தேசியப் பொதுக்குழு உறுப்பினராகவும் (AICC) கட்சிப் பணியைத் தொடர்தல்.

திட்டக்குழு உறுப்பினர்: கலைஞர் முதல்வராக ஐந்தாவது முறை பொறுப்பேற்றதும் (2006) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றும் படி அழைத்தல். முதல்வர் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பொறுப்பேற்க இசைதல் -இயன்றளவு சிறப்பாக முப்பது மாதங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்குச் செயல் வடிவம் அளித்தல் - ஈழத் தமிழர் பிரச்னையில் கலைஞரின் அணுகுமுறை அதிருப்தி அளித்ததால், கொட்டும் மழையில் மனிதச்சங்கிலியில் மணிக்கணக்கில் நனைந்தபடி நின்றும் இதய வெப்பம் தனியாததால், அங்கிருந்து நேரே `எழிலகம்’ சென்று திட்டக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதி கோட்டைக்கு அனுப்பிவிட்டு வெளியேறுதல். கலைஞரோடு இருந்த இணக்கமான உறவு முறிதல்.

காங்கிரசிலிருந்து வெளியேற்றம்: ஈழத் தமிழர் நலனுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நெஞ்சம் புண்ணாதல் - இந்திரா காந்தி நடைமுறைப்படுத்திய ஜனநாயக விரோத நெருக்கடி நிலையை எதிர்த்து 1975இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, மாநிலம் முழுவதும் தனி மனிதனாய்ப் போர்க்குரல் கொடுத்தவன், ஒரு குடும்பத்தின் முற்றுகையில் காங்கிரசின் சீரழிவைக்கண்டவன், காந்தியையும், காமராஜரையும் முற்றாக மறந்து ஆதாய அரசியலில் பாழ்பட்ட மனிதர்களின் பாசறையாய் கட்சி இழிந்துவிட்டதைக் கண்டு கலங்கியவன் விதிவசத்தாலும், வினைப் பயனாலும் மீண்டும் காங்கிரசில் இணைந்து செயற்பட நேர்ந்தது.

காந்தியத்தில் நாட்டம் கொண்ட, காமராஜரைக் கடவுளாகப் போற்றுகிற ஒருவனால் திராவிட இயக்கங்களின் பக்கம் திரும்பவும் கூடுமோ? இந்திய ஒருமைப்பாடு, ஜன நாயகம், மதச்சார்பின்மையை இலட்சியங்களாக நேர்ந்து கொண்டவன், ஆயிரம் குறைகள் இருந்தாலும், காங்கிரசில் கலப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இனப்பற்றும், மொழிப்பற்றும் இயல்பாகக் குடிகொண்டவன் காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர், அகில இந்திய காங்கிர￞ தேசியக்குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளைத் தூக்கியெறிந்து, இனநலனுக்குப் பாடுபட, காங்கிரசிலிருந்து வெளியேறல்.

 

காந்திய அரசியல் இயக்கம்: நேர்மை, வாய்மை, தனிவாழ்வில் தூய்மை, தன்னல மறுப்பு, மக்கள் நலன் சார்ந்த சிந்தனை ஆகியவையே பொதுவாழ்க்கைப்பண்புகள். இவைதான் காந்தியம் வளர்த்தெடுத்த பண்பு நலன்கள். சீரழிந்து சிதைந்துவிட்ட தமிழக அரசியலில் அறமும் அன்பும் சார்ந்த, வன்முறையின் நிழல் படாத பொது வாழ்வை, வளரும் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் மேலான நோக்கத்தில் பிறந்ததுதான் காந்திய அரசியல் இயக்கம். தன்னிடம் இருக்கும் அறிவு, ஆற்றல், செல்வம், உழைப்பு ஆகியவற்றைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்க விரும்புவோர் மட்டும் இந்த இயக்கத்தில் இணையலாம்.

வாழ்க்கை தந்த நிறைவுகள்: மாசற்ற பெற்றோருக்கு மகனாகப் பிறந்தது - முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்றது - பிரேமகுமாரி என்னும் காரியம் யாவினும் கைகொடுத்துத் துணை நிற்கும் மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையை மனைவியாக கரம் பிடித்தது- ஒழுக்கம் சார்ந்த (மணிவண்ணன், பூரணி) பிள்ளைகளுக்கு தந்தையாக இருப்பது - உயர்பண்புகள் நிறைந்த மருமகன் (சாலமொன்) மருமகள்

 
(சுஜாதா) அன்பில் நனைவது - கலைஞர் அரசிடம் பாரதி விருது பெற்றது - ஒரே நேரத்தில் அரசியல், இலக்கியம், ஆன்மிக தளங்களில் இயங்குவது -நான்கு பேரப் பிள்ளைகள் (முரளி, கெவின், விமல், ஆல்வின்) மழலையில் மகிழ்வது - நாற்பதாண்டு அரசியலில் நேர்மைக்கு மாறாகவும், அறத்திற்குப் புறம்பாகவும் ஒரு செப்புக்காசையும் சேர்க்காமல் வாழ்வது - அன்பிற் சிறந்த தம்பி, தங்கையரையும், உயிராய்ப் போற்றும் நண்பர்களையும், உறவாய் ஏற்றுக் கொண்ட உலகத் தமிழரையும் வரமாய்ப் பெற்றது - ஊருக்கு நல்லது சொல்வேன், மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் போன்ற படைப்புகளை எழுத நேர்ந்தது - சுதந்திர வேள்வி சொற்பொழிவுகளை நிகழ்த்தியது - "இன்னும் என்ன வேண்டும்? இந்தப் பிறவியில் இறைவன் தந்தது குறையற்ற வாழ்க்கை".


  

 

 
 
 
அன்பு மட்டுமே இறுதிவரை நிலைத்திருக்கும்!

ஆணின் துணையின்றிப் பெண்ணும், பெண்ணின் உறவின்றி ஆணும் வாழ முயல்வது இயற்கைக்கு முரணானது. ஒன்று மட்டும் போதுமென்றால் இரண்டெதற்கு? இரண்டின் இணைப்பில்தானே ஒன்றே பிறக்கிறது! இந்த இணைப்பு வெறும் உடலின்பத்துக்காக இல்லை. காமம், சரீரம் சம்பந்தப்பட்ட சதை மயக்கம். அது உடம்பில் தொடங்கி, உடம்பிலேயே முடிந்துவிடும். தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை நிலைத்திருக்கும்.

 
Copyright © 2008 thamizharuvimanian.com